கனமழை...! மதுரை கிழக்கு, வடக்கு தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!
மதுரை கிழக்கு, மதுரை வடக்கு தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்.26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. நேற்று முன்தினம் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. நேற்று காலையுடன் நிறைவடை 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஆனைமடுவு அணையில் 15 செமீ, தஞ்சாவூர் ஒரத்தநாடில் 13 செமீ, கன்னியாகுமரி கோழிப்போர்விளை, தக்கலை, நெய்யூர், திருவாரூர் மன்னார்குடி, தஞ்சை ஆடுதுறை ஆகிய இடங்களில் தலா 11 செமீ, அரியலூர் மாவட்டம் சுததமல்லி அணை, குடவாசல், இரணியலில் தலா 10 செமீ, மஞ்சளாறு, நீடாமங்கலத்தில் தலா 9 செமீ மழை பதிவாகியுள்ளது.
மதுரை நகரில் நேற்று மதியம் 3 முதல் 3:15 மணிக்குள் 45 மி.மீ., மழை பெய்தது. சாலை முழுவதும் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. நான்காவது வார்டு பார்க் டவுன் குடியிருப்பை மழைநீர் சூழ்ந்தது. ஆலங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளன. கனமழை காரணமாக சர்வேயர் காலனி, ஒத்தக்கடை காந்தி நகர் பகுதியிலும் வெள்ளநீர் வீடுகளை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக மதுரை கிழக்கு, மதுரை வடக்கு தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்ட பள்ளிகளில் இன்று சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.