தமிழகமே..! இன்று எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...? முழு விவரம் இதோ
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மழை காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள்(IT) தங்களது ஊழியர்களை இன்று முதல் அக்.17 வரை வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. வடகிழக்கு பருவமழையால் சென்னை வாசிகள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது. கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால், பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ இரயில் சேவைகள் மேற்கண்ட நாட்களில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.