BREAKING: ஒரே நாளில் மூன்றாவது முறையாக தங்கம் விலை உயர்வு..!
Today Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.54,160ஆக விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியை பண்டிகையால் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் நகைக்கடைகளில் படையெடுத்து வருவதால் ஒரே நாளில் மூன்றாவது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அவ்வப்போது குறைந்து மீண்டும் விலை உயர்ந்து பரமபத ஆட்டம் ஆடி வருகிறது. கடந்த மார்ச் 28ஆம் தேதி 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 6,250 ரூபாயை எட்டியது. இதனால் 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் வரலாற்றில் முதல் முறையாக 50 ஆயிரம் ரூபாயை எட்டியது. இதன் பின்னரும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
தங்கத்தின் விலை ஏப்ரல் மாதத்தில் ரூ.54,000த்தை தாண்டியது. ஏப்ரல் 19ஆம் தேதி புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை. 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 55,120 ஆக விற்பனையானது. இதனால் நகை வாங்குபவர்கள் கலக்கமடைந்தனர். கடந்த 20ஆம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகிறது
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது.
தங்கத்தின் விலை பரமபதம் ஆடி வரும் நிலையில், இந்நிலையில் ஈரான் இஸ்ரேல் போரால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நகை விற்பனையாளர்களும் நிபுணர்களும் கூறியிருந்தனர். இந்த நிலையில்தான் சென்னையில் ஆபரணத் தங்கம் கடந்த சில நாட்களாக சிறிய அளவில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.
இந்நிலையில், அட்சய திருதியை தினமான இன்று (மே 10) தங்கம் விலை ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்துள்ளது. முதலில் காலை 7 மணி அளவில் முதலில் கிராமுக்கு ரூ.45உயர்ந்தது. பின்னர் மீண்டும் 9 மணி அளவில் இரண்டாவது முறையாக தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 ரூபாய் உயர்ந்தது. தற்போது மூன்றாவது முறையாக அதிகரித்துள்ளது
அதன்படி சென்னையில் 9 மணியளவில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,705க்கு விற்பனையானது. அதேபோல ஒரு சவரன் தங்கம் விலை ரூ.720 உயர்ந்து ரூ.53,640க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரே நாளில் மூன்றவது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி மதியம் 3 மணி நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு சவரன் தங்கம் விலை ரூ.520 உயர்ந்து ரூ.54,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல வெள்ளியின் விலையும் கிராம் ஒன்றுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.91.20க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக அட்சய திரிதியை நாளில் மக்கள் ஆர்வத்துடன் தங்க நகை வாங்குவது வழக்கம். அதன்படி, காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் நகைக்கடைகளில் படையெடுத்து வருவதால் ஒரே நாளில் மூன்றாவது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.