உதயநிதியை வரவேற்க தடபுடல் ஏற்பாடு..!! பரிதாபமாக பறிபோன கூலித் தொழிலாளியின் உயிர்..!! தஞ்சையில் பரபரப்பு..!!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க சாலையோரத்தில் திமுக கொடி கட்டுவதற்கு இரும்பு கம்பு ஊன்றிய கூலித் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 7ஆம் தேதி தஞ்சை வருகிறார். துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தஞ்சைக்கு முதல் முறையாக வருவதால் திமுக நிர்வாகிகள் உதயநிதியை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நகரப்பகுதிகளில் சாலையின் இருபுறமும் திமுக கட்சி கொடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கான பணியை பந்தல் கோவிந்தராஜன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவரிடம் பணிபுரியும் ஊழியர்கள் சாலைகளில் திமுக கொடியை கட்டுவதற்காக இரும்பு கம்புகளை ஊன்றி வந்தனர். அப்போது, தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் முள்ளுக்காரத்தெருவைச் சேர்ந்த நாகராஜன் (38) என்பவர் இரும்பு கம்பு ஊன்றும் பணியில் ஈடுப்பட்டிருந்தார்.
அந்த இடத்தில் டிரான்ஸ்பார்மர் ஒன்று இருந்தது அதில் இருந்து மின் கம்பிகள் சென்றது. நாகராஜன் இரும்பு கம்பை தூக்கிய போது மேலே சென்ற மின் கம்பியில் பட மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த சக பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே நாகராஜனை 108 ஆம்புலன்ஸ் மூலம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நாகராஜனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, அங்கிருந்த கொடி கம்பங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. இறந்த நாகராஜனுக்கு சரியாக வாய் பேச முடியாத மனைவி, ஒரு மகன் இருக்கிறார்கள். கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்த நாகராஜன் இறந்த நிலையில், அவருடைய மனைவி மற்றும் மகனின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளதாக அவருடன் பணி செய்தவர்கள் வேதனை தெரிவித்தனர்.