’தவறு செய்வது மனிதம்... மன்னிப்பது தெய்வீகம்’..!! நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை..!!
நடிகை த்ரிஷா குறித்து கொச்சையாக பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு த்ரிஷா எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மன்சூர் அலிகானுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக நடிகை த்ரிஷா சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செயப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, மன்சூர் அலிகானின் பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். இதனையடுத்து, மனு மீதான தீர்ப்பை நீதிபதி அல்லி ஒத்திவைத்தார்.
இதற்கிடையே நடிகை த்ரிஷா குறித்து கொச்சையாக பேசியதற்காக நேற்று மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரியிருந்தார். அவரது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் விதமாக த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகை த்ரிஷாவிடம் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. அவர் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கபடும் எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தவறு செய்வது மனிதம், மன்னிப்பது தெய்வீகம் எனக் கூறி மன்சூர் அலிகானின் மன்னிப்பை த்ரிஷா ஏற்றிருந்த நிலையில், பக்தனால் அழகான கடவுளின் மனம் குளிர்ந்தது என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். மேலும் 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியும் வெற்றி பெறும் என கூறியுள்ளார்.