"ஊழலுக்கு டியூசன் எடுக்கலாம்.. நாடகம் நடத்தும் திமுக அரசு" - பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.!
இந்தியாவின் அரசியல் சூழல் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஒருபுறம் 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்காக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு வேலைகளில் கட்சிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் அரசியல் சார்ந்த மோதல்கள் தொடர்கிறது. மத்திய அரசுக்கு எதிராக நிதி பங்கீடு தொடர்பான விவகாரத்தில் கேரள அரசு கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருப்பதோடு டெல்லியில் ஆர்ப்பாட்டமும் நடத்தியது .
இந்நிலையில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்களில் திமுக அரசு பொய்யை மக்களிடம் பரப்பி வருகிறது என பரபரப்பான குற்றச்சாட்டை அண்ணாமலை முன் வைத்திருக்கிறார். இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் அவர், மாநில அரசின் நிர்வாக சீர்கேடுகளை சமாளிப்பதற்காக திமுக அரசு பொய்யை பரப்பி வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் ஆட்சியில் இருக்கும் போது ஊழல் செய்வது மட்டும்தான் அவர்கள் இலக்கு எனக் கூறிய அண்ணாமலை, எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் மாநிலங்கள் குறித்த உரிமையை பேசுவார்கள் என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார்.
மேலும் ஊழல் செய்வதை திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி என்று முன்னாள் நிதி அமைச்சரிடம் சென்று டியூஷன் கற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்திருக்கிறார். கடந்த ஆட்சிகளை போல் இல்லாமல் மத்திய அரசு மாநிலங்களுக்கு தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் தனது சமூக வலைதள பக்கத்தில் புள்ளி விவரங்களை அவர் பதிவு செய்துள்ளார் .
மத்திய அரசு மாநிலங்களிடமிருந்து அதிக வரியை வசூல் செய்து விட்டு குறைவான தொகையே மாநிலங்களுக்கு இசைவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக பேசிய திமுக எம்பி வில்சன் மத்திய அரசு மாநிலங்களிடமிருந்து வரி தொகையை பெற்று பாரபட்சமான முறையில் நிதி ஒதுக்கீடு செய்வதாக குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இது தற்போது விவாதம் ஆகி இருக்கும் நிலையில் மாநில அரசை மீண்டும் குறை கூறியிருக்கிறார் அண்ணாமலை.