TNPSC Group 4 | தமிழ்வழி சான்றிதழ் கட்டாயம்.. எந்த பார்மட்டில் இருக்க வேண்டும்? - TNPSC வெளியிட்ட முக்கிய தகவல்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ஆம் தேதி அன்று வெளியாகின. ரிசல்ட் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக கட் ஆப் பெற்ற தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்பாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய 10 நாட்கள் அனுமதி வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதேபோல, தேர்வர்கள் மனதில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு டிஎன்பிஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
அந்த வகையில், தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீடு கோரியுள்ளவர்கள், பிஎஸ்டிஎம் எனப்படும் தமிழ் வழி கல்வி சான்றிதழ் எந்த பார்மட்டில் இருக்க வேண்டும் என்பது பற்றி டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி கூறுகையில், "தமிழ் வழியில் கல்வி பயின்றோர் என உரிமை கோரும் தேர்வர்கள் அறிவிக்கை எண் 01/2024 பிற்சேர்க்கை II - இல் உள்ள படிவத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேர்வர்கள் சான்றிதழில் தங்களுடைய பெயர், வகுப்பு / பட்டம் பயின்ற ஆண்டு ஆகியவை சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் சான்றிதழை, அறிவிக்கையில் குறிப்பிட்டவாறு உரிய அலுவலரிடம் பெறப்படதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் இணையவழியில் பெறப்படாத சான்றிதழில் கல்வி நிறுவனத்தின் அலுவலக முத்திரை மற்றும் நாள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.