டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 ரிசல்ட்..!! தேர்வர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. குரூப் 2 தேர்வு முடிவுகள் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 1 தேர்வு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணி குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 9 லட்சம் பேர் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர், பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். காலியாக உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன. குறிப்பாக காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது. தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின்படி 2023ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.
தொகுதி-II முதன்மை எழுத்துத் தேர்வு தொடர்பாக அதிக அளவிலான தேர்வர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இருந்ததாலும், ஒரே நேரத்தில் மதிப்பீடு செய்ய வேண்டிய தேர்வுகள் மற்றும் பிறதேர்வுகள் நடத்த வேண்டியிருந்ததாலும், தொகுதி-II முதன்மை எழுத்துத் தேர்வு தொடர்பான தேர்வு முடிவுகள் தேர்வாணைய அட்டவணையில் டிசம்பர் 2023இல் வெளியிடப்படுவதாக ஏற்கனவே தற்காலிக தெரிவு முடிவு அட்டவணை குறித்த அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.
தேர்வு முடிவுகள் டிசம்பர் 16ஆம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், வெளியாகவில்லை. முன்னதாக, முதல்நிலைத் தேர்வை தேர்வர்கள் 2022 மே மாதத்தில் எழுதிய நிலையில், 1.6 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 டிசம்பரில் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதில் நியாயமே இல்லை. இவ்வளவு தாமதம் ஏன்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குரூப் 2 தேர்வு காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. தேர்வு முடிவுகளை விரைந்து வழங்கவேண்டுமென்ற நோக்கத்துடன், தொகுதி-II முதன்மை எழுத்துத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்த வேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், தொகுதி II தேர்வின் தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதியில் வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தொகுதி II தேர்வு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு முடிவுகளும் பிப்ரவரியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
9 பணியிடங்களுக்கான உதவி வனக்காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி மாதம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட உரிமையியல் நீதிபதி பணியில் 245 பேரை நியமனம் செய்வதற்கான முதன்மைத் தேர்வு கடந்த நவம்பரில் நடந்த நிலையில், அதன் முடிவுகள் ஜனவரி மாதம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு 15 தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான கால அட்டவணையையும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.