ரேஷன் கடையில் உங்கள் குடும்ப நபர்களின் விபரங்களை சரிபார்ப்பு செய்தீர்களா.? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு.!
குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகையை சரி பார்க்க ரேஷன் கடைக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விரல் ரேகை சரிபார்ப்பு செய்யாதவர்களின் பெயர்கள் ரேஷன் அட்டையில் இருந்து நீக்கப்படும் என்று வந்த வதந்தி பொய்யானது என்று தமிழ்நாடு உணவுத்துறை அறிவித்துள்ளது.
06.02.2024 மற்றும் 07.02.2024 அன்று வெளிவந்த சில நாளேடுகளில், பிப்ரவரி மாத இறுதிக்குள் குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் கைரேகையையும் சரிபார்ப்பு செய்திருக்க வேண்டும். ஒரு வெள்ளை தாளில் அனைவரது சுய விபரங்களையும் எழுதி சமர்ப்பித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதவர்களின் பெயர்கள் ரேஷன் அட்டையிலிருந்து நீக்கப்படும் என்ற செய்தி வெளியானது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று தமிழ்நாடு உணவுத்துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது.
ஒன்றிய அரசு, அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விபரங்களை சரி பார்ப்பதற்காக, மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகைகளும் சரிபார்க்கப்பட வேண்டும் என்று அறிவித்திருந்தது.
அதன்படி கடந்த அக்டோபர் 2023 முதல் இந்த கைரேகை சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. இந்த சரிபார்ப்பினை மேற்கொள்வதற்கு குடும்ப உறுப்பினர்கள் ஓய்வாக இருக்கும் பொழுதோ அல்லது பொருட்களை வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு செல்லும் பொழுதோ, கைவிரல் ரேகை பதிவதன் மூலம் சரிபார்ப்பை மேற்கொள்ளலாம்.
இதுவரை 63% மக்களின் குடும்ப அட்டைதாரர்களின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மக்களின் அட்டைகளை சரிபார்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் வசதிக்கேற்ப தங்களது விபரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று உணவுத்துறை அறிவித்துள்ளது. மேலும் வெள்ளைத் தாளில் எந்த விபரங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை.
சரி பார்த்து செய்ய முடியாதவர்களுக்காக தனி முகாம்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. தேவைப்பட்டால் வீட்டிலேயே வந்து குடும்ப அட்டைதாரர்களின் விபரங்களை சரி பார்க்க ஏற்பாடுகள் செய்யப்படும். நாளேடுகளில் குறிப்பிட்டது போல் கைவிரல் ரேகை சரிபார்ப்பு செய்யாதவர்களின் பெயர்கள் குடும்ப அட்டைகளில் இருந்து நீக்கப்படாது என்று தமிழக உணவுத்துறை இது குறித்த தனது விளக்கத்தை அளித்துள்ளது. இது குறித்த அச்சம் இனி மக்களுக்கு தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.