திருவண்ணாமலையும்.. அதிசய கோபுரங்களும்.. பின்னால் இவ்வளவு பெரிய வரலாறு இருக்கா..?
பஞ்சபூதத் தலங்களில் திருவண்ணாமலை அக்னித் தலமாக விளங்குகிறது. இங்கு தான் சிவபெருமான் விஷ்ணுவிற்கும் பிரம்மாவிற்கும் அடி, முடி தெரியா காட்சி அளித்த இடம். இங்கு மலையே சிவபெருமானாக காட்சி அளிப்பதால் பக்தர்கள் இம்மலையைச்சுற்றி கிரிவலம் வருகின்றனர். அண்ணாமலையார் ஆலயத்தின் தற்போதைய முழுமையான கட்டிட அமைப்புகள் அனைத்தும் கட்டி முடிக்க, சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பதாக கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. கயிலாய மலையில் சிவபெருமான் வீற்றிருப்பதால் அது புனிதமானது. அதே போல் சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதால் திருவண்ணாமலையும் புனிதமானதாக கருதப்படுகிறது.
25 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரமாண்ட ஆலயம் இது. இதில் 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 சன்னிதிகள், 306 மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்டவை அடங்கியிருக்கின்றன. அந்த ஒன்பது கோபுரங்கள் யாவை அவைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
ராஜ கோபுரம் : இக்கோபுரமானது கிழக்கு பார்த்து கட்டப்பட்டுள்ளது. இதை கட்டியவர் கிருஷ்ணதேவராயர் அதனாலேயே இதற்கு ராயர் கோபுரம் என்ற பெயரும் உண்டு. இக்கோபுரத்தை கட்ட ஆரம்பித்த கிருஷ்ணதேவராயர், தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட அதிக உயரம் கொண்டதாக இக்கோபுரமானது இருக்க வேண்டும் என நினைத்து 217 அடி உயரத்தைக் கொண்டு இக்கோபுரமானது கட்டப்பட்டுள்ளது. இக்கோபுரத்தின் கீழ் பகுதி கற்களாலும், மேற்பகுதி செங்கல் மற்றும் சுதையாலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கோபுரத்திற்கு கீழ் மோட்ச தீபம் ஏற்றுவது வழக்கத்தில் இருந்தது. சமீபத்தில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேய் கோபுரம் : ராஜ கோபுரத்திற்கு நேரே மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் இக்கோபுரத்தின் பெயர் மேற்கு கோபுரம். நாளடைவில் சொல் மருவி பேய்க்கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இது மலையை எதிர்நோக்கியபடி இருக்கும். இதன் உயரம் 160 அடி. இக்கோபுரத்தில் மகிசாசுரணை துர்க்கை வதம் செய்யும் காட்சி, முனிவர்கள், பூதகனங்கள், சிவன் பார்வதி, முருகன் சரபேஸ்வரர் ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
திருமஞ்சன கோபுரம் : இக்கோபுரம் தெற்கு திசையில் இருக்கும் கலசத்திற்கு திருமஞ்சனம் செய்வதற்காக யானை மீது ஏறி புனித நீரை இந்த வாசல் வழியாகத்தான் எடுத்து வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். எனவே இந்த கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்று பெயர். ஆனி திருமஞ்சனம் அன்றும் ஆருத்ரா தரிசனம் அன்றும் நடராஜரின் திருவீதி உலாவானது இவ்வாசல் வழியாக தான் நடைபெறும். ஏராளமான அழகு சிற்பங்களும், கல்வெட்டுகளும் நிறைந்ததாக திகழும் இக்கோபுரமானது 150 அடி உயரங்கொண்டது.
வல்லாள மகாராஜா கோபுரம்: இக்கோபுரத்தை கட்டியது வல்லாள மகாராஜா ஆதலால் இதற்கு இப்பெயர். இவரின் பக்தியை அறியும் பொருட்டு இவரின் சிலையானது இக்கோபுரத்தின் கீழ் இருக்கும் தூணில் இருப்பதை காணலாம். கிளி கோபுரம்: இந்த கோபுரம் மிகவும் பழமையானது. இதை கட்டியது ராஜேந்திர சோழன். இதன் உயரம் சுமார் 140 அடி. இந்த கோபுரத்தின் உச்சியில் கிளி சிற்பம் இருக்கும். இதற்கு ஒரு புராண கதை உண்டு. அருணகிரி நாதர் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையின் உதவியால் கிளி உருவம் எடுத்து தேவலோகம் சென்ற சமயத்தில் அவரது உடலை சம்பந்தாண்டான் என்பவன் எரித்து விட்டான். தனது உடலை அருணகிரி நாதர் இழந்ததால், கிளி உருவத்திலேயே கோபுரம் மேல் அமர்ந்து நிறைய பாடல்கள் பாடினாராம். அதனால் இதற்கு கிளி கோபுரம் என்ற பெயர் உண்டு. இக்கோபுரத்தில் 33 கல்வெட்டுகள் இருக்கிறது என்கிறார்கள்.
தெற்கு கட்டை கோபுரம்: திருமஞ்சன கோபுரம் அருகே கட்டப்பட்டுள்ளது. தெற்கு கட்டை கோபுரம் என்ற பெயரும் உண்டு. இதன் உயரம் சுமார் 70 அடி இந்த கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளன. மேற்கு கட்டை கோபுரம்: இது சிறிய கோபுரமாகும். இதன் உயரம் 70 அடி. இந்த கோபுரத்தில் காவல் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.
அம்மணியம்மாள் கோபுரம்: வடக்கு திசையில் இந்த கோபுரம் அமைந்துள்ளது. அம்மணிம்மாள் என்ற பெண் சித்தர் உருவாக்கிய கோபுரம் இது என்கிறார்கள். வடக்கு கட்டை கோபுரம்: 70 அடி உயரம் உள்ள இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன.