IPL 2024 | சென்னை, ஹைதராபாத் போட்டிகளில் மோசடி.!! சைபர் க்ரைம் காவல்துறை விசாரணை.!!
IPL 2024: தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னை மற்றும் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற லீக்காட்டங்களில் டிக்கெட் மோசடி குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
2024 ஆம் வருட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கு பெறும் இந்த கிரிக்கெட் போட்டி தொடரில் இதுவரை 19 ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கிறது. இதுவரை நடந்து முடிந்த ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்தில் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணி இரண்டாவது இடத்திலும் சிஎஸ்கே அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. இதுவரை ஒரு வெற்றிகள் கூட பெறாத மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது.
ஐபிஎல்(IPL) கிரிக்கெட் தொடரின் டிக்கெட் விற்பனையில் பல லட்ச ரூபாய் மோசடி நடந்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பொதுவாகவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர்களின் டிக்கெட் விற்பனைக்கு அதிக டிமாண்ட் இருக்கும். இதனை பயன்படுத்தி சமூகவிரோதிகள் பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்திருக்கிறது.
இந்த மோசடி தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் நடைபெற்ற லீக் போட்டிகளின் போது போலி இணையதளங்களை ஆரம்பித்து வீரர்களை அருகில் இருந்து பார்க்கலாம் எனக்கூறி தள்ளுபடி விலையில் டிக்கெட் விற்பனை செய்வதாக மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே டிக்கெட் வாங்க வலியுறுத்தி வருகிறது.