தமிழ்நாட்டில் வேகமாக பரவும் உண்ணி காய்ச்சல்.. இரண்டு பேர் பலி..!! அறிகுறிகள் என்னென்ன..?
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை புதுகாலக்கவுண்டன்பட்டியை சேர்ந்த முதியவர் பழனிசாமி (61) என்பவர் கடந்த டிசம்பர் 10-ம் தேதி உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவருக்கு உண்ணி காய்ச்சல் இருப்பது உறுதியானது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஆண் ஒருவரும் உண்ணி காய்ச்சல் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். சுகாதாரத்துறையினர் பாதிக்கப்பட்ட இருவரின் சுற்று வட்டார பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி மக்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்து வருகின்றனர். திண்டுக்கல்லில் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளதாகவும் திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அறிகுறிகள் : காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, தசை வலி, வாந்தி, தொண்டைப் புண் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். அறிகுறிகள் எதாவது தென்பட்டால் உடனடியாக மருத்துவமனை செல்லுங்கள். சாதாரண காய்ச்சல் என அலட்சியமாக இருக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.