ADMK | "திமுக ஆட்சி நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட்"… எடப்பாடி பழனிச்சாமி காட்டமான விமர்சனம்.!
ADMK: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு துவங்குவதற்கு 4 நாட்களே மீதி இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக(ADMK) இந்த பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக புதிய தமிழகம் எஸ் டி பி ஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் பெரம்பலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து துறையூரில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சி சிம்ப்ளி வேஸ்ட் என தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் சொல்லுவதற்கு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு அதிகரித்து வருவதாகவும் மக்கள் மிகவும் ஏழ்மை நிலைக்கு செல்வதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
கடன் வாங்குவது போதை பொருள் விற்பனை போன்றவற்றில் தமிழகம் முன்னோடியாக திகழ்வதால் முதல்வர் ஸ்டாலின் தன்னை சூப்பர் முதல்வர் என்று கூறிக் கொள்ளலாம் எனவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். முதல்வரின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகியோர் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருக்கிறார். இவரது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.