சென்னையில் யூடியூபர்களை மிரட்டிய விவகாரம் - மூன்று பேர் கைது
குடிபோதையில் இருந்த இளைஞர்கள், பிரபல யூடியூபரின் கேமராக்களை பிடுங்கி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் இணையத்தில் வைரலான நிலையில், 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
பிரபல யூடியுபரான நந்தா, A2D என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறார். குறிப்பாக தொழில்நுட்ப ரீதியாகவும், எலக்ட்ரானிக் சாதனப் பொருட்கள், செல்போன்கள் உள்ளிட்டவை குறித்தும் வீடியோக்களை வெளியிடுவதை நந்தா வாடிக்கையாக கொண்டுள்ளார். இவரை 15.5 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். வழக்கம்போல் ரிச்சி தெருவில் செல்போன் தொடர்பாக நந்தா தனது நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ பதிவு ஒன்றை எடுத்து வந்துள்ளார்.
அப்போது அங்கு மது அருந்தி கொண்டு இருந்த சில இளைஞர்கள், தங்களை வீடியோ எடுப்பதாக தவறாக நினைத்துக் கொண்டு அந்த யூடியூபர்களை மடக்கிப் பிடித்து கேமரா, செல்போன்களை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆயுதம் இருந்ததால் உயிர் பிழைத்தால் போதும் என்று அந்த யூடியூபர்கள் தப்பித்து வந்துள்ளனர்.
இந்த காட்சிகள் அனைத்தையும் நந்தா தனது போனில் வீடியோ எடுத்து, அதை தனது youtube சேனலில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பல யூடியூபர்கள் மற்றும் நெட்டிசன்கள் வெளியிட்டு காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
இதன் அடிப்படையில் சிந்தாதிரிபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் யூடியூபரை மிரட்டிய விவகாரத்தில் பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் பார்த்திபன், கிஷோர் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் பார்த்திபன் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளதாகவும் கிஷோர் மனைவியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் பட்ட பகலில் பரபரப்பான ரிச்சி தெருவில், யூடியூபர்களைமிரட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.