மியான்மரில் பயங்கர மோதல் ; ஆயிரக்கணக்கானோர் தாய்லாந்தில் தஞ்சம்!
மியான்மரில் கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்ட மோதல் காரணமாக, அந்நாட்டின் எல்லையில் வசித்த 1,300க்கும் மேற்பட்டோர் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நம் அண்டை நாடான மியான்மரில், அந்நாட்டு ராணுவத்திற்கும், பூர்வகுடிகளான காரேன் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் நிழவி வருகிறது. நேற்று முன்தினம் ராணுவ வசமிருந்த அந்நாட்டின் எல்லை நகரான மியாவாடியை கைப்பற்றும் நோக்கில் கிளர்ச்சியாளர்கள், அப்பகுதியின் மீது ஆளில்லா விமானங்களின் வாயிலாக தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக, அந்நாட்டு விமானப் படையினர் தாக்கினர்.
மோதல் நிகழும் மியாவாடி நகரம், தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இரு நாடுகளையும் இணைக்கும் வகையில், மோய் நதியின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை, இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு பாலம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், மியாவாடியில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், ஏராளமானோர் தாய்லாந்து நோக்கி சென்றனர். இந்த தாக்குதலின் முடிவில், அப்பகுதியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனை மியான்மர் ராணுவத்தினர் மிகப்பெரிய பின்னடைவாக கருதுகின்றனர்.
இது தொடர்பாக தாய்லாந்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ''மியாவாடி நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால், அங்குள்ள மக்கள் அச்சத்தின் காரணமாக எங்கள் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம். எங்கள் எல்லையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இத்தகைய மோதல்களை நாங்கள் விரும்பவில்லை. மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றனர்.