பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்களே!… இன்றுமுதல் பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் இன்று டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது. பேருந்து முன் பதிவு இணையதளம் வழியாகவும், முகாம் மூலமாகவும் துவங்கி உள்ளது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 17 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவுக்கு கோயம்பேட்டில் 10 மையங்களும், தாம்பரத்தில் ஒரு மையமும் செயல்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மையங்களில் நேரடியாக சென்று புக் செய்ய முடியும். உதாரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளே 10 மையம் உள்ளது. இங்கே சென்று பணம் கொடுத்து புக் செய்ய முடியும். இல்லையென்றால் https://www.tnstc.in/home.html பக்கத்தில் புக் செய்ய முடியும். அதில் லாக் இன் செய்து அல்லது செய்யாமல் விவரங்களை கொடுக்கலாம். செல்ல வேண்டிய இடம் , புறப்படும் இடம், நாள் தேதி குறிப்பிட்டால் பேருந்துகள் காண்பிக்கப்படும். அதில் தேவையான டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும்.
கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி, 14ம் தேதி ஞாயிறன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்பின் வரிசையாக பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று 3 நாட்கள் விடுமுறை. சனிக்கிழமையுடன் சேர்த்து 4 நாட்கள் விடுமுறை உள்ளது. இந்த நீண்ட விடுமுறை காரணமாக மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் தீபாவளியை விட கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.