ACCIDENT | தோப்பூர் கணவாய் சாலையில் தொடரும் விபத்துகள்.! காரணம் இதுதான்.!
.உலகில் சில பகுதிகளில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றின் காரணமாக அந்தப் பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் உயிர் இழப்புகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது. நமது தமிழ்நாட்டில் அது போன்று இருக்கும் ஒரு இடம்தான் தோப்பூர்.
தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த தோப்பூர் கணவாய் சாலை அடிக்கடி சாலை விபத்துக்கள் நடைபெறும் ஒரு இடமாகும். இங்கு நடைபெறும் சாலை விபத்துகளுக்கு அமானுஷ்ய சக்திகள் தான் காரணம் என பரவலாக நம்பப்பட்டு வருகிறது. எனினும் அவற்றிற்கு உண்மையான காரணம் அந்த இடத்தின் புவியியல் அமைப்பாகும்.
பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை 47(NH47) தோப்பூர் கணவாய் அமைந்திருக்கிறது. பார்ப்பதற்கு மரங்கள் சாலைகள் குரங்குகள் என அழகாக இருக்கும் இந்த நெடுஞ்சாலை மிகவும் ஆபத்து நிறைந்த ஒன்றாக இருக்கிறது. இந்த சாலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதம் சரக்கு லாரி ஒன்று டிராபிக்கில் நின்று கொண்டிருந்த 13 வாகனங்களின் மீது மோதி மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தியது
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததோடு 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 13 வாகனங்கள் சேதமடைந்தது. இன்று காலை தோப்பூரில் மீண்டும் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கிறது. லோடு ஏற்றி சென்ற லாரி பிரேக் பிடிக்காமல் 5 வாகனங்களின் மீது மோதி மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் 961 விபத்துக்கள் நடந்திருக்கிறது. இவற்றில் 255 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற புள்ளிவிபரம் அதிர்ச்சி அடைய வைக்கிறது.
இங்கு தொடர்ச்சியாக நடைபெறும் விபத்துகளுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இந்த இடத்தின் புவியியல் அமைப்பு முக்கிய காரணமாக இருக்கிறது. பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் போது சாலை மிகவும் குறுகலாக மலைச்சிறுவிலிருந்து இறங்குவது போல் இருக்கும். இந்த புவியியல் அமைப்பு தான் பெரும்பாலான விபத்துக்கு காரணமாக அமைகிறது . இதில் கார்கள் எளிதாக இறங்கி விடுகின்றன.
ஆனால் லாரிகள் பிரேக் ஃபெயிலியர் ஆகி விபத்துக்களை ஏற்படுத்துகிறது. இவற்றிற்கு காரணம் லாரிகளில் இருக்கும் ஏர் பிரேக் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இங்கு லாரிகளை வேகமாக ஓட்டி வரும்போது சாலை சரிவாக இருப்பதால் லாரிகள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் லாரிகளை மெதுவாக இயக்கினாலும் அவற்றில் இருக்கும் இயர் பிரேக் பிரஷர் குறைந்து ப்ரேக் ஃபெயிலியர் ஆவதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தோப்பூர் கணவாய் சாலையில் விபத்துகளை குறைப்பதற்காக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களை 30 கிலோ மீட்டர் ஸ்பீடில் இயக்கும்படி வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்பீக்கர்கள் மூலமும் போக்குவரத்து காவலர்கள் வாகன ஓட்டிகளை எச்சரித்து வருகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளால் விபத்துக்கள் பெருமளவில் குறைந்து இருக்கிறது.
மேலும் இங்கு விபத்துகளை குறைப்பதற்காக உயர்த்தப்பட்ட சாலைகள் அமைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது உயர்த்தப்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.