ஒற்றைத் தூணில் நிற்கும் பெரிய குகைக்கோயில்.. இந்த தூண் விழும்போது உலகம் அழிந்துவிடுமாம்..!!
இந்தியா கோவில்கள் நிறைந்த பூமி. ஒவ்வொரு தெருக்களிலும் கூட கோவில் இருக்கிறது. அந்த அளவிற்கு கோவில்களால் நிறைந்த பூமி. அதில் பல பழமையான மற்றும் மர்மமான கோயில்கள் உள்ளன, இந்தியாவின் கேதாரேஷ்வர் ஆலயம் அத்தகைய அதிசயங்களில் ஒன்றாகும், இங்கு முழு கோயிலும் ஒரே ஒரு தூணில் தாங்கி பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒற்றைத் தூணில் வீற்றிருக்கும் ரகசியம் என்ன, அது எப்படி சாத்தியமாகி உள்ளது, இந்த கோவிலின் ரகசியம் என்ன என்று இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஹரிஷ்சந்திரகாட் கோட்டையில் அமைந்துள்ள இந்த கோயில் கேதாரேஷ்வர் குகைக் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் அதன் இயற்கைக்கு அப்பாற்பட்ட அழகு மற்றும் மர்மமான அமைப்புக்காக புகழ் பெற்றது. நம்பிக்கையின்படி, கோவிலின் தூண்கள் நான்கு காலங்களைக் குறிக்கின்றன. சத்ய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம். இவற்றில் மூன்று தூண்கள் ஏற்கனவே விழுந்துவிட்டன, கடைசி தூண் விழுந்தால் உலகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. கோயிலின் உள்ளே இயற்கையாக உருவான அதிசய சிவலிங்கம் உள்ளது.
அருகிலுள்ள ஒரு குகையில், ஐந்தடி சிவலிங்கம் பனிக்கட்டி குளிர்ந்த நீரில் மூழ்கியுள்ளது. இந்த நீரில் நீராடுவது அனைத்து பாவங்களையும் பிரச்சனைகளையும் நீக்கும் என்று நம்பப்படுகிறது. 6 ஆம் நூற்றாண்டில் கலாச்சூரி வம்சத்தால் கட்டப்பட்ட கோயிலின் குகைகள் மற்றும் அமைப்பு மர்மமான தோற்றத்தை விட்டுச்செல்கிறது. இந்த கோவில் ஒரு மத ஸ்தலமாக மட்டுமல்லாமல், பண்டைய இந்திய கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரத்திற்கு ஒரு விதிவிலக்கான எடுத்துக்காட்டாகும்.
மற்றொரு சுவாரசிய விஷயம் இந்த கோவிலில் உள்ள குளம். மலைகள் மற்றும் குகைக்குள் இந்த கோவில் இருந்தாலும், இந்த கோவிலின் நடுவில் நீர்த்தேக்கம் உள்ளது. இந்த குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். இந்த குளத்தின் நீர் கோடையில் மிகவும் குளிராகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்கும் என்பது தான் ஆச்சரியமான விஷயம்.
இந்தக் குளத்தின் நடுவில் தான் இந்த நான்கு தூண்களும் ஐந்தடி சிவலிங்கமும் அமைந்துள்ளது. இந்த சிவலிங்கத்தை அடைய, இடுப்பளவு நீர் தேக்கத்தில் நடந்து தான் செல்லவேண்டும்.இந்த கோவிலை அடைய எந்த பேருந்தும் வண்டியும் கிடையாது. மலைப்பாதையில் ட்ரெக்கிங் செய்து தான் போகவேண்டும். அதனால் இந்த கோவில் ஆன்மீக ரீதியாக மட்டும் அல்லாமல் சாகச பயண ரீதியாகவும் மக்களை ஈர்த்து வருகிறது.