”பொதுமக்களிடம் இனி இப்படித்தான் பேச வேண்டும்”..!! தமிழ்நாடு முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு..!!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 66 பேர் பலியானதை அடுத்து, தமிழகம் முழுவதும் காவல்துறையில் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஐஜி யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட எஸ்பி-க்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
அதாவது, மிகவும் அராஜகத்தில் ஈடுபடும் ரவுடிகளின் பட்டியலை அனுப்புமாறும் ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு அடக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், ஏடிஜிபி டேவிட்சன் காவல்துறையினருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்கள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகளுடன் மரியாதையான மற்றும் பயனுள்ள தகவல் தொடர்புகளை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் மற்றும் கீழ் பணியாற்றுபவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக பொதுமக்களிடம் பேசுகையில் மிஸ்டர், மிஸ்ஸஸ், சார், மேடம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டியது அவசியம். ஒருமையில் ஏகவசனத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும். அத்துடன் பொதுமக்களின் குறைகளை கவனமாக கேட்க வேண்டும். உங்கள் உடல் மொழி புகாரளிக்க வருபவர்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கக் கூடாது. துயரத்துடன் புகார் அளிக்க வரும் மக்கள், போலீசாரை பார்த்து அச்சம் கொள்ளாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.