ஈரானை அழிக்க இதுவே சரியான நேரம்!. தாக்குதலுக்கு அழைப்பு விடுத்த இஸ்ரேல் முன்னாள் பிரதமர்!.
Israel EX-PM: ஈரானின் அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த இதுவே சரியான நேரம் என்று இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்தாண்டு அக். 7ம் தேதி தாக்குதலை நடத்தி இருந்தது. அன்றைய தினம் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பல நூறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஹமாஸ் மீது இஸ்ரேல் போரை அறிவித்தது. அந்த போரில் காசாவில் உள்ள பல ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அந்த போரை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் முயலும் போதிலும், போர் தொடர்ந்தே வருகிறது. காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பான ஹிஸ்புல்லா கடுமையாக எதிர்த்தது. மேலும், இஸ்ரேல் மீதான தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.
இதன் காரணமாக மத்திய கிழக்கில் கடந்தாண்டு ஏற்பட்ட பதற்றம் இன்னும் குறையவே இல்லை. சொல்லப்போனால் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறதுஏற்கனவே ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் தரப்பிலும் தாக்குதல்கள் அவ்வபோது நடத்தப்படுகிறது. இதனால், 3ம் உலகப்போர் உருவாகும் சூழல் நிலவுகிறது.
இந்தநிலையில், ஈரானின் அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த இதுவே சரியான நேரம் என்று இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இஸ்ரேலுக்கு இது ஒரு வரலாற்று வாய்ப்பு, இது இப்போது எடுக்கப்படாவிட்டால், ஈரான் அணுசக்தி நாடாக மாறும். இந்த நிலை மிகவும் பாரதூரமானது என்று கூறினார்.
ஈரான் அணுசக்தி நாடாக மாறாமல் தடுக்க இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கூறிய நஃப்தலி பென்னட், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற ஈரானின் நட்புக் குழுக்கள் இந்த நேரத்தில் தற்காலிகமாக வலுவிழந்துவிட்டதாகவும், இஸ்ரேல் தாக்குவதற்கு சரியான நேரத்தை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். சமீபத்திய வாரங்களில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ராக்கெட் தாக்குதல்கள் இந்த நடவடிக்கையை முன்னெப்போதையும் விட வலிமையாக்கியுள்ளன என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், அத்தகைய சாத்தியமான தாக்குதலை அமெரிக்கா ஆதரிக்கவில்லை. ஈரான் மீதான இத்தகைய ஒருதலைப்பட்ச இராணுவ நடவடிக்கையை ஆதரிக்க மாட்டோம் என்று அமெரிக்கா தெளிவாகக் கூறியுள்ளது. கூடுதலாக, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் அமெரிக்கத் தலைவர்கள் பெர்லினில் சந்தித்து மத்திய கிழக்கில் நடந்து வரும் முன்னேற்றங்கள் மற்றும் உக்ரைன் போர் குறித்து விவாதிக்க உள்ளனர்.