”சென்னை பெருவெள்ளத்திற்கு காரணமே இதுதான்”..!! மாநகராட்சி மீது பாய்ந்த சென்னை உயர்நீதிமன்றம்..!!
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது.மழை நின்று ஒரு வாரத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் தற்போதுதான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. இருப்பினும் புறநகர் பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாததால் மின்சாரமின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடும் விமர்சனங்களை தெரிவித்திருக்கிறது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது தொடர்பான சீராய்வு மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். அதாவது, ”சென்னை மாநகராட்சி வரம்புக்குள் பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரிக்கும் முறை மோசமாக செயல்படுத்தப்படுகிறது.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் வடியாமல் தேங்கி நின்றதற்கு பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகள் நீர் வழிப்பாதையை அடைத்ததே காரணம். குப்பைகளை வீடுகளில் இருந்து பெற்று அதை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரிப்பது முறையாக செயல்படுத்தப்படவில்லை. பிளாஸ்டிக் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை" என்று கூறினர்.
மேலும் ஆவின் பால், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விநியோகிப்பதற்கு பதில், ஏன் கண்ணாடி பாட்டிலில் விநியோகிக்க கூடாது என்று கேள்வி எழுப்பி, இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர், இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று தெரிவித்தனர் வெள்ளிக்கிழமை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.