’5,000 ஆண்டுகளுக்கு முன்பே இது நடந்துவிட்டது’..!! ’விமானம் தயாரிப்பதற்கான யோசனையை தந்ததே இவர்’..!! ஆனந்தி பென் படேல் பேச்சு..!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆனந்தி பென் படேல், ”மக்கள் நம்பிக்கைக்கு மாறாக, கும்பகர்ணன் 6 மாதங்கள் தூங்கவில்லை. அவர், ஒரு தொழில்நுட்ப நிபுணராக இருந்தார். தனது ஆய்வகத்தில் 6 மாதங்கள் ரகசியமாக இயந்திரங்களை தயாரித்தார். இதனால், அவர் பொதுவெளியில் வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.
மாணவர்கள், தங்கள் முன்னோர்கள் செய்த இணையற்ற ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளைப் பாராட்டுவதற்கு பண்டைய இந்திய நூல்களைப் படிக்க வேண்டும். பண்டைய இந்தியாவின் முனிவர்கள், அறிஞர்கள் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளை இந்த உலகிற்கு தந்துள்ளனர். அந்த வகையில், பரத்வாஜும் (வேதகாலத்தைச் சேர்ந்தவர் பரத்வாஜ் முனிவர். இவர், ராமாயணம் மற்றும் மகாபாரதம் இரண்டிலும் குறிப்பிடப்படுகிறார்) விமானம் தயாரிப்பதற்கான யோசனையை கொடுத்தார்.
சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே புஷ்பவிமானத்தில் சென்றதாக ராமாயணத்தில் குறிப்புள்ளது. ஆனால், அதன் கண்டுபிடிப்புக்கான பெருமை வேறொரு நாடு பெற்றது. இப்போது அது ரைட் சகோதரர்களின் கண்டுபிடிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். முன்னதாக ஆனந்திபென் படேல் பேசிய வீடியோவைப் பகிர்ந்த காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷிரினேட், ”பட்டமளிப்பு விழாவில் இந்த ஆழ்ந்த அறிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.