ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் வயது வரம்பை குறைக்க வேண்டும்..!! - பிரதமருக்கு திருமாவளவன் கடிதம்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மூத்த குடிமக்களின் வயதை 70 லிருந்து 60 ஆகக் குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 10.4 கோடி பேர் 60 வயதைக் கடந்தவர்கள் இந்தியாவில் வசித்து வருகின்றனர் என்று தெரிய வந்தது. கடந்த 13 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும்.
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான இந்த சலுகையை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் விரிவு படுத்தினால் பரவலாகப் பலர் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற முடியும். தற்போதைய திட்டத்தில் 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் மருத்துவ செலவினங்களைக் கருத்தில் கொண்டு இதை 10 லட்சம் ஆக உயர்த்த வேண்டும்.
மூத்த குடிமக்களின் மக்கள் தொகையில் 71% கிராமப்புறங்களில் உள்ளனர். அவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம். ஒப்பீட்டளவில் கிராமப் புறங்களில் மருத்துவ வசதியும் குறைவாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தில் கிராமப்புறப் பெண்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
மூத்த குடிமக்களிலேயே மாற்றுத் திறனாளிகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய மூத்த குடிமக்களின் எண்ணிக்கையில் ஒரு லட்சம் பேருக்கு 5177 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கெனக் குறிப்பான திட்டம் வகுக்கப்பட வேண்டும்." என அந்த கடித்தத்தில் விசிக தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
Read more ; அமரன் படம் எப்படி இருக்கு? படம் பார்த்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் கூறிய விமர்சனம் இதோ..