கூட்டணி அழுத்தத்தால் திருமாவளவன் வரவில்லை... "மனம் முழுக்க முழுக்க நம்முடன் தான் இருக்கும்" - விஜய் பேச்சு…
சென்னை வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “ அம்பேத்கர் நினைவு நாளில் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது எனக்கு கிடைத்த வரமாக நினைக்கிறேன். 100 ஆண்டுகளுக்கு முன்பே நியூயார்க் சென்று அங்குள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் ஒருவர் இருந்தார். ஆனால் அவர் எந்த சூழலில் படித்தார் என்பது தான் பெரிய விஷயம்.
அன்று அந்த மாணவருக்கு அத்தனை சக்திகளும் அவருக்கு எதிராக இருந்தது. ஆனால் ஒரே ஒரு சக்தி தான் அவரை படி என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தது. அது தான் அவரின் மனதிற்குள் இருந்த வைராக்கியம். அந்த வைராக்கியம் தான் இன்று இந்த நாட்டின் மிகப்பெரிய ஆளுமையாக மாறியவர். அந்த மாணவர் வேறு யாருமில்லை அம்பேத்கர் தான்.
அம்பேத்கரின் வைராக்கியம் பிரமிக்கத்தக்கது. பிறப்பால் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் சாசன சட்டத்தை வகுத்து நாட்டிற்கே பெருமை தேடி தந்தவர். சமூக கொடுமை தான் அம்பேத்கரை சமத்துவத்திற்காக போராட வைத்தது. அம்பேத்கரின் வெயிட்டிங் ஃபார் விசா என்ற கோரிக்கை என்னை பிரமிக்க வைத்தது.
ஜனநாயகத்தின் ஆணிவேர் தேர்தல்கள் தான். அந்த தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்பது தான் என் கோரிக்கை. அம்பேத்கரின் பிறந்தநாளான் ஏப்ரல் 14-ம் தேதியை ’இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும்’ என்பது தான் எனது மற்றொரு கோரிக்கை. அதை இந்திய ஒன்றிய அரசிடம் நான் முன்வைக்கிறேன். மணிப்பூரில் நடப்பது நமக்கு தெரியும். அதை பற்றி கொஞ்சம் கூட கண்டுக்காமல் மத்தியில் ஒரு அரசு ஆட்சி செய்கிறது. ஆனால் இங்குள்ள அரசு எப்படி இருக்கு?
தமிழ்நாட்டில் வேங்கைவயல் கிராமத்தில் என்ன நடந்தது என்று நம் அனைவருக்கும் தெரியும். சமூக நீதியை பேசும் இங்கிருக்கும் அரசு அதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரியே தெரியவில்லை. இதெல்லாம் இன்று அம்பேத்கர் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார். பெண் குழந்தைகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, மனித உயிர்களுக்கு எதிராக பல பிரச்சனைகள் நடக்கிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு தான். மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒரு நல்ல அரசு தேவை. இதை அமைத்துவிட்டாலே போதும்.
தினமும் நடக்கும் பிரச்சனைகளுக்கு சம்பிரதயாத்திற்காக ட்வீட் போடுவது, சம்பிரதாயத்திற்காக அறிக்கை விடுவதும், சம்பிரதாயத்திற்காக மழை நீரில் நின்று போட்டோ எடுப்பது. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஆனால் நாமும் சம்பிரதாயத்திற்காக அவ்வாறு செய்ய வேண்டி உள்ளது. மக்களின் உரிமைகளுக்காக, மக்களின் உணர்வுகளுக்காக தான் நான் எப்போதும் இருப்பேன்.
மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனசாக்கி விடுவார்கள்.
கடைசியாக ஒரே ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்கிறேன். விசிக தலைவர் தொல் திருமாவளவன் இன்று இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு, அவருக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவரின் மனம் இன்று முழுக்க முழுக்க நம்முடன் தான் இருக்கும்" என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.