சூப்பர்...! மூன்றாம் பாலினத்தவர் மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர் மாற்றம் செய்ய அனுமதி...! தமிழக அரசு அரசாணை...!
மூன்றாம் பாலினத்தவருக்கு வழங்கப்படும் SSLC மற்றும் HSC மதிப்பெண் சான்றிதழ்களில் பாலின பெயர் மாற்றம் & உரிய திருத்தம் மேற்கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; பள்ளிகளில் பயின்று, இடைநிலை / மேல்நிலை ஆகிய பொதுத் தேர்வுகளை எழுதும் மாணாக்கர்கள், பாலின மாற்றம் அடைந்த பிறகு, தாம் மூன்றாம் பாலினத்தவர் என தெரிவித்து, பெயர் மாற்றம் செய்யக் கோரும் நிகழ்வுகளில், மருத்துவ அறிக்கை, அரசிதழ் வெளியீடு, தமிழ்நாடு திருநங்கையர் நலவாரியம் / சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை அல்லது அரசால் வழங்கப்படும் ஏதேனுமொரு அடையாள அட்டை முதலிய ஆவணங்களின் அடிப்படையில், பெறப்படும் பாலின மாற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை தனி நேர்வாகக் கருதி, கீழ்க்காணுமாறு திருத்தம் மேற்கொள்ளவும், புதிய சான்றிதழ் வழங்கவும் அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பாலின மாற்ற விண்ணப்பதாரர்கள் 2012-ம் ஆண்டிற்கு பிறகு பொதுத் தேர்வெழுதிப் பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களாக இருக்குமாயின் அவர்களுக்கு புகைப்படமின்றி புதிய மதிப்பெண் சான்றிதழ் மறு அச்சழுத்தம் செய்து வழங்க அனுமதி. மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பெயர் முழுமையாக மாற்றம் செய்யப்படுவதால், Bar Code இன்றி புதிய மதிப்பெண் சான்றிதழ் மறு அச்சழுத்தம் செய்து வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் பராமரிக்கப்படும் மதிப்பெண் அட்டவணைப் பதிவேட்டினில் மூன்றாம் பாலினத்தவர் சார்ந்து பாலினம் என பதிவு செய்ய அனுமதி. பிறப்பில் ஆணா பெண்ணா எனக் கண்டறியப்படாமல் பின்னர் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாறிடும் தேர்வர்கள் சார்ந்து மதிப்பெண் சான்றிதழ்களில் உரிய திருத்தத்தினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.