திக்!. திக்!. பும்ராவின் மாஸ்டர் கிளாஸ்!. த்ரில் வெற்றிபெற்ற இந்தியா!. மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி அபாரம்!
T20 WC: பும்ராவின் அபார பந்துவீச்சால் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றிபெற்றுள்ளது.
9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நியூயோர்க்கின் நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் நடந்த 19வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருந்த இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா 13 ரன்களிலும், விராட் கோலி 4 ரன்களிலும் ஆட்டமிழந்து நடையை கட்டினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். ரிஷப் பண்ட் மட்டும் நிதானமாக விளையாடி, 42 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதனை தொடர்ந்து அக்ஷர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். பாகிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய நஸீம் ஷா, ஹரிஸ் ரஃப் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் 19வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி, 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.
120 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறக்கிய பாகிஸ்தான் அணி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தாலும் மிடில் ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரிஸ்வான் 31, பாபர் அசாம் 13, உஷ்மான் கான் 13, ஜமான் 13, வாசீம் 15 ரன்களில் அவுட் ஆகினர். கடைசி 2 ஓவரில்களில் 21 ரன்கள் தேவைப்பட்டபோது பும்ரா, அர்ஷ்தீப் அபாரமாக பந்துவீசி அணிக்கு மகத்தான வெற்றியை தேடித் தந்தனர்.
அபாரமாக பந்து வீசிய பும்ரா, 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து ரிஸ்வான், பாபர் அசாம், இஃப்திகார் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார். இவரது அதிரடியான பந்துவீச்சால் தோல்வி விளிம்பில் இருந்த இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் பும்ரா, ஆட்டநாயகன் விருதுவென்றார். இந்த த்ரில்லரை வென்ற பிறகு, இந்தியா இரண்டு ஆட்டங்களில் இரண்டு வெற்றிகள் மற்றும் நான்கு புள்ளிகளுடன் குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. 2 போட்டியிலும் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் நான்காவது இடத்தில் உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி, நாக் அவுட் நிலை வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.
Readmore: ஜம்மு-காஷ்மீரில் பேருந்து மீது பயங்கரவாத தாக்குதல் – யாத்ரீகர்கள் 10 பேர் உயிரிழப்பு