என் ஆடை பற்றி பேசி தொல்லை கொடுக்கிறார்கள்!… செஸ் வீராங்கனை வேதனை!
பார்வையாளர்கள் விளையாட்டை ரசிக்காமல், பாலின பாகுபாட்டை காட்டும் கருத்துகளை கூறி தொல்லை கொடுத்ததாக இந்திய செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இளம் செஸ் வீராங்கனையாக இருப்பவர் திவ்யா தேஷ்முக். 18 வயதான இவர், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர். இந்தியாவின் பெண் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான இவர், கடந்த ஆண்டு ஆசிய பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார். இந்நிலையில் தான் சமீபத்தில் இவர் நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜியில் நடந்த டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் பங்கேற்றார். திவ்யா தேஷ்முக், டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியில் 4.5 புள்ளிகளுடன் சேலஞ்சர்ஸ் பிரிவில் 12வது இடத்தை பிடித்தார்.
இந்த செஸ் போட்டியில் திவ்யா தேஷ்முக் விளையாடியபோது பார்வையாளர்கள் அவரது விளையாட்டை ரசிக்காமல் பாலின பாகுபாட்டை காட்டும் வகையிலான கமெண்ட்டுகளை கூறி தொல்லை கொடுத்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனை திவ்யா தேஷ்முக் தனது இன்ஸ்டாவில் நீண்ட பதிவாக வெளியிட்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், ‛‛நான் இதுபற்றி சிறிது நேரம் பேச விரும்பினேன். இதற்காக போட்டி முடியும் வரை காத்திருந்தேன். செஸ்ஸில் பெண்கள் எப்படி பார்வையாளர்களால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள் என்பதை நான் சொல்கிறேன். மேலும் நானே அதனை நேரில் கவனித்தேன். இது ஒரு சிறிய உதாரணம் தான். நான் விளையாடிய போட்டிகளில் சில முக்கிய நகர்வுகளை செய்தேன். இதனால் மிகவும் நன்றாக உணர்ந்தேன். அதோடு பெருமையும் பட்டேன்.
ஆனால் போட்டியின் பார்வையாளர்கள் அதை பற்றி எந்த கவலையும் கொள்ளவில்லை. மாறாக எனது உடை, முடி, வார்த்தை உச்சரிப்பு உள்ளிட்ட பிற தேவையில்லா விஷயங்களை கவனிக்கின்றனர். இதனால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். பெண்கள் சிறப்பாக செஸ் விளையாடும்போது பார்வையாளர்கள் அவர்களின் திறமையை கவனிக்காமல் இருப்பது என்பது சோகமான உண்மையாக இருக்கிறது.
மேலும் எனது நேர்க்காணல்களில் கேம்களை தவிர பிற அனைத்து விஷயங்களையும் பார்வையாளர்கள் விவாதிக்கின்றனர் என்பதை அறிந்து ஏமாற்றமடைந்தேன். இது நியாயமற்றது. ஏனென்றால் நேர்க்காணல்களில் ஆண்கள் சென்றால் அவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்த கேள்வி என்பது மிகவும் குறைந்த அளவில் தான் இருக்கும்'' என வருத்தமாக கூறியுள்ளார்.
மாறாக அவர்களின் விளையாட்டு, வெற்றி குறித்த பாராட்டுகள் இருக்கும். பார்வையாளர்கள் பெண் வீராங்கனைகளை குறைவாக மதிப்பிட்டு அவர்கள் பற்றிய தேவையில்லா விஷயங்களை பேசுகின்றனர். இதில் வீரர்கள் தப்பித்து விடுகின்றனர். மேலும் இந்த பிரச்சனையை பெண்கள் தினமும் எதிர்கொள்வதாக நான் நினைக்கிறேன். எனக்கு இப்போது 18 வயது தான் ஆகிறது. பெண்களுக்கும் சமமான மரியாதை கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்'' என வருத்தத்துடன் பதிவிடுள்ளார்.