முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இவர்களையும் பட்டதாரி ஆசிரியராக நியமனம் செய்ய வேண்டும்...! தமிழக அரசுக்கு பாமக கோரிக்கை...!

They should also be appointed as graduate teachers.
07:00 AM Nov 15, 2024 IST | Vignesh
Advertisement

தமிழ்நாட்டில் கணினி அறிவியலை தனிப்பாடமாக்கி, கணினி பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியலை தனிப்பாடமாக அறிவித்து, அதற்கான பயிற்றுனர் பொறுப்பில் கணினி அறிவியல் பட்டத்துடன் கல்வியியல் பட்டமும் பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று கணினி அறிவியல் பட்டதாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அந்தக் கோரிக்கையை ஆய்வு செய்வதற்குக் கூட தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. கணினி அறிவியலை தனிப்பாடமாக்க தமிழக அரசு மறுத்து வருவது மிகவும் பிற்போக்கான செயலாகும்.

கணினி அறிவியலை தனிப்பாடமாக்க வேண்டும் என்பது புதிய கோரிக்கை அல்ல. 2006-11 திமுக ஆட்சிக்காலத்தின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் வலியுறுத்தலால் தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் தனிப்பாடமாக்கப்பட்டு, அதற்கான பாடநூல்கள் அச்சிடப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால், அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது கணினி அறிவியலை தனிப்பாடமாக்கும் திட்டம் கைவிடப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் இப்போதும் கணினி அறிவியல் கற்றுத்தரப்படுகிறது. ஆனால், அது தனிப்பாடமாக அல்லாமல் இணைப்பாடமாக கற்றுத்தரப்படுகிறது. அதனால் மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை. மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்தியாலா பள்ளிகளில் 6 முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியலின் நவீன வடிவமான செயற்கை அறிவுத்திறன் தனிப்பாடமாக்கப்பட்டுள்ளது. இன்றைய இணைய உலகில் கணினி அறிவியல் அனைத்துத் துறைகளுடனும் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அதை தனிப்பாடமாக கற்பிக்க தமிழக அரசு மறுப்பதை ஏற்க முடியாது.

தமிழ்நாட்டில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கணினி அறிவியலுடன் கல்வியல் பட்டமும் பெற்று வேலைவாய்ப்பின்றி உள்ளனர். அவர்களுக்கு வேலைவழங்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கணினி அறிவியலை கற்பிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நவீன கணினி ஆய்வகங்கள் அமைக்க வேண்டும். அதற்கு கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இத்திட்டத்தின்படி, ஹை டெக் ஆய்வகம் எனப்படும் கணினி ஆய்வகம் அமைக்க பள்ளி ஒன்றுக்கு 6.40 லட்ச ரூபாய், கணினி ஆசிரியர்களை நியமித்து ஊதியம் வழங்க ஒருவருக்கு ஆண்டுக்கு 1.80 லட்ச ரூபாய் வீதம் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது.

மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர்கள் 6,454 பேர், நடுநிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர்கள் 8,209 பேர்என மொத்தம் மொத்தம் 14,663 கணினி பயிற்றுநர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக நிதியை பெற்றுள்ள தமிழக அரசு, அந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை. கணினி ஆய்வக பயிற்றுனர்களாக கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தில் பணியாற்றியவர்களில் 8200 பேரை தேர்வு செய்து தமிழக அரசு நியமித்துள்ளது. இது மத்திய அரசின் விதிகளுக்கு எதிரானது.

ஹைடெக் ஆய்வக பயிற்றுனர்களாக நியமிக்கப்பட்ட அவர்களை அந்தப் பணியில் ஈடுபடுத்தாமல் எமிஸ் (Educational Management Information System - EMIS) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் மாணவர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுத்துகின்றனர். அதனால், உயர் ஆய்வுக் கூடங்கள் எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டனவோ, அந்த நோக்கமே சிதைந்து விட்டது. எனவே, உயர் ஆய்வுக் கூடங்களின் பயிற்றுனர்களாக கணினி அறிவியல் பட்டத்துடன், பிஎட் பட்டமும் படித்து வேலைவாய்ப்பின்றி வாடும் பட்டதாரி ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியலை தனி பாடமாக கொண்டு வர வேண்டும்; அவற்றுக்கு தனி பாட வேளைகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Tags :
mk stalinpmkRamadasstn government
Advertisement
Next Article