சிறையில் கையை உடைத்து விட்டார்கள்…! கருணை அடிப்படையில் ஸ்டாலின் முதல்வர் ஆகியுள்ளார்…! ஜாமீனில் வெளிவந்த சவுக்கு சங்கர் பகீர் குற்றச்சாட்டு..!
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பெண் போலீசை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்பட அவர் மீது மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, திருச்சி, சென்னை உள்பட பல இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது அதிரடியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படத்து. அதன்பிறகு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது. 2-வது முறையாக சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் தேனி போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து சவுக்கு சங்கரின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதனையடுத்து சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அவருக்கு எதிராக வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால், அவரை ஜாமீனில் விடுதலை செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன் இந்த வழக்கை முடித்து வைத்தது. இந்நிலையில், நேற்று மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஜாமினில் வெளிவந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், "கோவை சிறையில் எனது கையை உடைத்து விட்டார்கள், முன்பு இருந்தது போல் மீண்டும் அதே வீரியத்துடன் நிச்சயம் செயல்பட்டு மக்களிடம் உண்மைகளை எடுத்துச் சொல்வேன். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விமர்சனங்களை பார்த்து பழகியவர் அல்ல, தந்தையின் நிழலில் போன்சாய் செடி போல வளர்ந்தவர். பணியில் இருக்கு ஊழியர்கள் இறந்தால் கருணை அடிப்படையில் வேலைத் தருவதைப் போல் தான் திமுகவின் தலைவர் ஆகி இருக்கிறார். அதேபோல் தான் தமிழகத்தின் முதல்வரும் ஆகி இருக்கிறார். உண்மைகள் எந்த விதத்திலும் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மிக கவனமாக இருக்கிறார்கள்" என்று கூறினார்.