"மோடியின் உளவியல் விளையாட்டு தான் இந்த கருத்துக்கணிப்பு..!!" - காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஜூன் 4 ஆம் தேதி வெளியேறப்போவது உறுதி என தெரிந்ததும் மக்களை திசை திருப்ப மோடி இறுதியாக திட்டமிட்டது தான் இந்த கருத்துக்கணிப்பு என்று காங்கிரஸ் சார்பில் குற்றசாட்டு எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "அரசாங்கத்தின் அடுத்த 100 நாட்களுக்கான வேலைத் திட்டம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு நடத்துவதற்கு காரணம் இருக்கிறது. இவை அனைத்தும், நான் திரும்பி வருகிறேன், நான் மீண்டும் பிரதமராகப் போகிறேன் எனக்கூறும் ஒரு வகையான உளவியல் ரீதியிலான விளையாட்டு. அவர் நாட்டின் நிர்வாக அமைப்புக்கும், அரசு அதிகாரிகளுக்கும் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறார்.
சனிக்கிழமை வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் முற்றிலும் போலியானவை. ஜூன் 4ம் தேதி வெளியேற உள்ள ஒரு மனிதரின் தந்திரம் அது. இவையெல்லாம், பதவியில் இருந்து வெளியேறப்போகும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் உளவியல் விளையாட்டுக்களின் ஒரு அங்கம்.
இந்தக் கருத்துக்கணிப்புகள் எல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முறைகேடுகளை நியாயப்படுத்துவதற்கான திட்டமிடப்பட்ட முயற்சியாகும். மேலும் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி கட்சித் தொண்டர்களின் மன உறுதியை குலைப்பதற்கான முயற்சியுமாகும். நாங்கள் பயப்படப்போவதில்லை. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு ஜூன் 4ம் தேதி வெளியாகும் உண்மையைான தேர்தல் முடிவுகளில் இருந்து மாறுபட்டு இருக்கும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். அதன் முக்கிய வேலை குறித்த நம்பிக்கையை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அனைத்துக் கட்சிகளும் அணுகக்கூடிய வகையிலும், பாஜகவின் நீட்டிக்கப்பட்ட அங்கமாக செயல்படாமலும் தேர்தல் ஆணையம் இருக்கும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
Read more ; சிக்கிம் சட்டசபை தேர்தல் முடிவுகள்: 32 இடங்களில் 31 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்த SKM..!