”இந்த வழக்குகளை விசாரிக்கவே கூடாது”..!! ஷாக் கொடுத்த மத்திய அரசு..!! அதிரடி உத்தரவு போட்ட சுப்ரீம் கோர்ட்..!!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 டிசம்பர் 11ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு 2019 டிசம்பர் 12ஆம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. அதாவது இந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகளுக்கு குடியுரிமை வழங்குகிறது.
இஸ்லாமியர்கள் மட்டும் விடுபடுவதை எதிர்த்து 2019 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. டெல்லியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்த போராட்டங்களில் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த மார்ச் 11ஆம் தேதி அமலுக்கு வந்தது. மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி உள்ளிட்ட பலர் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ”சிஏஏ சட்டம் நிறைவேற்றப்பட்டு 3 ஆண்டுகள் கழித்து அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இப்போது குடியுரிமை வழங்கிவிட்டால், பின்னர் திரும்பப் பெற இயலாது. ஆகையால், சிஏஏவை அமல்படுத்தும் அறிவிப்பாணையை மத்திய அரசு நிறுத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் சார்பாக வாதிட்டார்.
மத்திய அரசு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். மேலும், சிஏஏவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கவே கூடாது எனவும் இந்த வழக்குகளை தொடர்ந்தவர்களுக்கு தார்மீக பொறுப்பு கிடையாது எனவும் வாதிட்டார். இதனையடுத்து, குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளுக்கு எதிரான மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மனுக்கள் மீதான விசாரணையை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Read More : சீமான் – விஜயலட்சுமி வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!! ஏப்ரல் 2ஆம் தேதி கன்ஃபார்ம்..!!