2026-ல் தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சியில் அமரும்...! உறுதியாக சொல்லும் அண்ணாமலை...!
2026-ல் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை; ஈரோடு இடைத்தேர்தல், இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல். கடந்த தேர்தலில் ஈரோட்டில் மக்களை பட்டியில் அடைத்து வைத்து திமுகவினர் சித்திரவதை செய்து துன்புறுத்தினர். மீண்டும் மக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாககக்கடாது என்பதற்காக பாஜக போட்டியிடவில்லை. 2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதியில் ஜெயிப்போம் என யாரும் சொல்ல முடியாது. இரவில் நன்றாக தூங்கச் செல்பவர்கள் காலையில் எழுந்திருப்பதில்லை. எனவே 2026-ல் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும் என்றார்.
திருப்பரங்குன்றம் மலை மீது நடக்கும் பிரச்சினைக்கு திமுக அரசு பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் செயலை செய்கிறது. அதற்கு கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். தவெக தலைவர் விஜய்யை சமீபத்தில் திராவிட கட்சித்தலைவர் ஒருவர் கூட்டணிக்கு அழைத்தார், தற்போது செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கூட்டணியில் சேருங்கள் என அழைத்துள்ளார். அவர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை தயவுசெய்து ராகுல் காந்தி மீது வையுங்கள் என அறிவுரை கூறுவது எனது கடமை. பாஜக யாரையும் கூப்பிட வேண்டிய அவசியமில்லை. பாஜக கட்சி தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தமிழர்களின் அடையாளம் பெருமை. அதில் துணை முதல்வரும், அவரது மகனும் பங்கேற்பது தவறல்ல. ஆட்சியரை எழுப்பிவிட்டு அவரது இருக்கையில் மகனின் நண்பர்களை அமரவைத்தது தவறு. அமைச்சர் மூர்த்தி நடந்துகொண்ட விதம் அநாகரிகம். அதிலும் ஆட்சியர் யாரும் என்னை வற்புறுத்தவில்லை என பதிலளித்தது முட்டாள் தனமானது. அரசியல் லாபம் கருதிக்கூட இருக்கையை விட்டுக் கொடுத்திருக்கலாம். அமைச்சர் மூர்த்தி பவர் இருக்கும் வரை ஆடுவார். அதிகாரிகள் ஒருபோதும் தன்மானத்தை விட்டுக்கொடுக்கக்கூடாது.
திமுக பிறக்கும் முன்பே திருவள்ளுவர் திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் சொல்லி வந்திருக்கிறார். அதனை வள்ளுவர் ஆரிய கைக்கூலியாக இருந்துகொண்டு திருவள்ளுவர் கருத்துகளை திணித்துள்ளார் என பெரியார் கடுமையாக சாடினார். அவரது வழியில் வந்த திமுகவினர் வள்ளுவரை பற்றி பேச அருகதை இல்லை. குறிப்பாக முரசொலிக்கு அருகதை இல்லை என்றார்.