திருடனுக்கு தேள் கொட்டியது போல அமைதியாக வேடிக்கை பார்க்கும் திமுக..! அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு...!
கர்நாடக மாநில பாஜக ஆட்சியில், இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட, இது போன்ற தண்ணீர்ப் பஞ்சம் என்ற செய்தி வந்ததில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதாக சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கண்டித்து, கர்நாடக விவசாயிகள் மற்றும் ரைதா ஹிதாராக்ஷனா சமிதி அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்நிலையில் பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, மாளவல்லியில் உள்ள ஷிவா நீர்த்தேக்கத்தை நிரப்புவதற்காக கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதாகவும், அங்கிருந்து பெங்களூருக்கு குடிநீர் தேவைக்கு நீர் கொண்டுசெல்லப்படுவதாகவும் அம்மாநில துணை முதல்வரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் விளக்கம் அளித்தார்.
காவிரி நதி நீரை தமிழகத்துக்கு விடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் பாய்கிறது என்பதற்கு ஒரு கணக்கு இருக்கிறது. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு விடுவிக்க இந்த அரசாங்கத்தில் நாங்கள் முட்டாள்கள் அல்ல. பெங்களூருவுக்கு தண்ணீர் பம்ப் செய்யும் இடத்தில் நீர் மட்டம் குறைவாக உள்ளது என்றார். பெங்களூர் நகரத்தின் தண்ணீர்ப் பஞ்சத்திற்குக் காரணம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு சரியான திட்டமிடல் இன்றி இருந்தது தான் என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; பெங்களூர் நகரத்தின் தண்ணீர்ப் பஞ்சத்திற்குக் காரணம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு சரியான திட்டமிடல் இன்றி இருந்தது தான். கர்நாடக மாநில பாஜக ஆட்சியில், இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட, இது போன்ற தண்ணீர்ப் பஞ்சம் என்ற செய்தி வந்ததில்லை என்பதில் இருந்து, காங்கிரஸ் அரசின் திறனின்மை விளங்கும்.
இதனைக் காரணம் காட்டி, தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரை வழங்காமல் காங்கிரஸ் அரசு மறுப்பதை, தனது இந்தி கூட்டணி நலனுக்காக, திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது திமுக. இந்தி கூட்டணி நலனுக்காக, திமுக, தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்திற்குச் சேர வேண்டிய தண்ணீரை வழங்க, கர்நாடக காங்கிரஸ் அரசை திமுக அரசு வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.