தமிழகத்தில் பெண் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை...! இ.பி.எஸ் பகீர் குற்றச்சாட்டு...!
தமிழ்நாட்டில் பெண் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளின் அவல நிலை குறித்து செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்த விளக்கம் தருவதாக பெண் செய்தியாளர் லதா என்பரை தலைமைச்செயலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் அலுவலகத்தில் வைத்து மிரட்டி அனுப்பி இருப்பது சமூகநீதி, பெண் விடுதலை குறித்து பக்கம்பக்கமாக பேசும் விடியா திமுக அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.
ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலாளர் லட்சுமி பிரியா அவர்கள் பேட்டி கொடுக்க தலைமைச் செயலகத்திற்கு அழைத்த நிலையில், பேட்டியின் இடையில் பெண் செய்தியாளர் லதா ,அரசு அதிகாரி வெற்றிச்செல்வன் என்பவரால் மிரட்டப்பட்டு, செயலாளர் அறையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஆதி திராவிடர் மாணவர் விடுதியின் உண்மை நிலையை மக்களுக்கு வெளியே கொண்டுவந்த ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்தை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பெயரால் விடியா திமுக அரசு மிரட்டுவது பாசிசத்தின் உச்சம்.
விடியா திமுக ஆட்சியில், மாண்பு பொருந்திய தலைமைச் செயலகத்தில், ஒரு பெண் செய்தியாளர் நடத்தப்படும் முறை இது தானா? பெண் செய்தியாளரை மிரட்டிய அரசு அதிகாரிகள் மற்றும் துறைச் செயலாளர் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், அதிகார மமதையோடு ஊடகங்களை ஒடுக்க நினைக்கும் முயற்சிகளை கைவிடுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
மேலும் ஆதிதிராவிட மாணவர்களின் நலனுக்காக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் லதா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு தொடர்வேன் என தலைமைச் செயலகத்தில் வைத்தே அதிகாரி மிரட்டி இருப்பது குறித்து முதலமைச்சர் பதில் சொல்லியே தீர வேண்டும். "ஊடகச் சுதந்திரம்", "கருத்துச் சுதந்திரம்" என்றெல்லாம் வாயளவில் மட்டுமே பேசும் விடியா திமுக முதல்வர், ஊடகங்களின் செயல்பாட்டை முடக்க முயல்வதுற்கும், மிரட்டுவதுற்கும் எனது கடும் கண்டனங்கள் என தெரிவித்துள்ளார்.