’அரசு விற்கும் மதுவில் கிக் இல்லை’..!! ’உழைப்பவர்களின் அசதியை போக்க மது தேவை’..!! அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு..!!
அரசு விற்கும் டாஸ்மாக் மதுவில் தேவையான கிக் இல்லாததால், அரசு விற்கும் சரக்கு Soft Drink போல மாறிவிடுகிறது என துரைமுருகன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு திருத்தச் சட்ட முன்வடிவை மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். இந்த சட்ட திருத்தத்தின்படி கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 10 லட்சம் அபராதமும் விதிக்க இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சட்டத்திருத்தம் குறித்த மசோதா மீது பேரவையில் விவாதம் நடைபெற்றது. இதில், பாமக சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே.மணி பூரண மதுவிலக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், "கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி என தமிழகத்தை சுற்றி இருக்கும் மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிலைமை இப்படி இருக்க தமிழ்நாடு மட்டும் எப்படி பற்றிக் கொள்ளாத கற்பூரமாக பாதுகாக்க முடியும்..? உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. ஆனால், அரசு விற்கும் டாஸ்மாக் மதுவில் தேவையான கிக் இல்லாததால், அரசு விற்கும் சரக்கு Soft Drink போல மாறிவிடுகிறது. கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர்" என்று கூறினார்.
இதனையடுத்து பேசிய அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வரும் சூழல் தற்போது இல்லை. படிப்படியாக கடைகளை மூடினாலும் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. எனவே, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு விவகாரத்தில் முதல்வர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார்" என்று சட்டப்பேரவையில் அமைச்சர் முத்துசாமி பதிலளித்தார்.