’இதுக்கு ஒரு முடிவே இல்லையா’..? கொரோனா தொற்றால் ஒரே வாரத்தில் 1,700 பேர் பலி..!! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!
கடந்த 2020இல் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸால், பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். பின்னர் முழு ஊரடங்கு, தடுப்பூசிகள் ஆகியவற்றால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால், தற்போது கொரோனா வைரஸின் தீவிரம் குறைந்துள்ள போதிலும், அது இன்னும் உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom) தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் (Geneva) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். தற்போதும் உலகம் முழுவதும் ஒரு வாரத்தில் 1,700 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாக தெரிவித்தார். பல நாடுகளில் கொரோனா வைரஸுக்கு எதிராக நோய்த்தடுப்பு மருந்துகளைப் பெறுவதில் குறைந்த போக்கு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் வைரஸைத் தொடர்ந்து பலவீனப்படுத்தத் தடுப்பூசிகளைப் பெறுவது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.
அதிக ஆபத்துள்ள குழுக்களில் உள்ளவர்கள், அவர்களின் கடைசி மருந்தின் 12 மாதங்களுக்குள் கொரோனா19 தடுப்பூசியைப் பெற வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. அத்துடன் 7 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா இறப்புகள் உலக சுகாதார அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் தொற்றுநோயின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதேவேளை கொரோனா தொற்று பொருளாதாரங்களை துண்டாடியதுடன் சுகாதார அமைப்புகளை முடக்கியதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.