’டானா’ புயல் கரையை கடந்த பிறகும் சம்பவம் இருக்கு..!! திசை மாறுகிறதாம்..!! வானிலை ஆய்வு மையம் திடீர் எச்சரிக்கை..!!
வங்கக் கடலில் உருவான டானா புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை (வெள்ளிக்கிழமை) கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் டானா புயலால் பாதிக்கப்படும் இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த புயல் பிதர்கனிகா தேசிய பூங்கா மற்றும் தாம்ரா துறைமுகத்துக்கு இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டானா புயல் கரையைக் கடக்கும் போது ஒடிசாவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் மேற்கு வங்கத்தின் மேற்கு பகுதி மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது காற்று மணிக்கு 120 கிமீ வேகத்தில் வீசும். அதனால், இன்றிரவு முதல் நாளை காலை வரை கனமழை, காற்று மற்றும் இடி, மின்னல் போன்றவை உச்சத்தில் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டானா புயல் குறித்து புவனேஸ்வர் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் மனோரமா மொஹந்தி கூறுகையில், ”டானா புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மயூர்பஞ்ச், கேந்திரபாரா, பாலசோர், பத்ரக், ஜாஜ்பூர், கட்டாக் மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஆகவே, இந்த அனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பூரி, கோர்தா, நாயகர், தேன்கனல், கியோஞ்சர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சுந்தர்கர், தியோகர், அங்குல், பௌத், கந்தமால், கஞ்சம், ஜார்சுகுடா மற்றும் சம்பல்பூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் கடுமையான சூறாவளி புயல் ஏற்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 26ஆம் தேதி மீண்டும் தெற்கு ஒடிசாவில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அக்டோபர் 26ஆம் தேதி தெற்கு ஒடிசா மாவட்டங்களில் கனமழையை ஏற்படுத்திய பின், டானா புயல் மேற்கு மற்றும் தென் மேற்கு திசையில் சிறிது திசை மாறி திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.