For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் தேனி!

04:59 PM Mar 29, 2024 IST | Baskar
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எடுத்த விபரீத முடிவு   சோகத்தில் தேனி
Advertisement

தேனி மாவட்டம் சின்னமனூர் சொக்கநாதபுரம் தண்ணீர் தொட்டி தெருவில் வசித்து வந்தவர் செவந்திவீரன். இவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற நிலையில், அதனை திருப்பி செலுத்த காலதாமதம் ஆகியுள்ளது. இதனால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த தனியார் நிறுவன ஊழியர்கள், செவந்திவீரனை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டிச் சென்றுள்ளனர்.

Advertisement

தொடர்ந்து இரண்டு நாட்களாகவே தனியார் நிறுவன ஊழியர்களின் நெருக்கடி அதிகரித்துள்ளது. இதையடுத்து, வியாழனன்று இரவு, செவந்திவீரன் வீட்டிற்கு மீண்டும் வந்த தனியார் நிறுவன ஊழியர்கள், மிகவும் மோசமாக திட்டியுள்ளனர். இதனால் மனவருத்தமடைந்த செவத்திவீரனும், அவரது 45 வயதான மனைவி ஒச்சம்மாள் மற்றும் 31 வயதான மகன் ராஜேஷ் ஆகியோரும் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தனர். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பயந்து இரவு நேரத்தில் மூவரும் விஷம் குடித்தனர்.

மறுநாள், செவந்திவீரன் வீட்டுக்கதவு வெகு நேரம் திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, 3 பேரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள், சின்னமனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வீட்டிலிருந்து விஷ பாட்டில்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட செவத்திவீரன், அரசு மது பானக்கடை பாரில் சமையல் வேலை செய்து வந்துள்ளார். அவரது மனைவி ஒச்சம்மாள் சின்னமனூர் நகராட்சியில் மருந்து தெளிக்கும் பணி மேற்கொண்டு வந்துள்ளர். அவர்களது மகன் ராஜேஷ், தனியார் நகை அடகு கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

தனியார்  நிறுவன ஊழியர்களின் மிரட்டலால் தான் செவத்திவீரன் குடும்பத்தார்கள் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.
ஒரே  குடும்பத்தை சேர்ந்த மூவர் கடன் பிரச்னை கரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement