தீரன் சின்னமலை பிறந்த தினம் இன்று!… வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நினைவுத்தூண்!
Dheeran Chinnamalai: சுதந்திரமான வாழ்க்கை என்பது இந்திய மக்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. பலரது ரத்தம் தான் இப்போது நாம் சுவைத்துக் கொண்டிருக்கும் சுதந்திரம். பல போராட்ட வீரர்களில் ஒரு சிலரின் வரலாறுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படிப்பட்ட போராட்டக்காரர்களில் ஒருவர்தான் தீரன் சின்னமலை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்று சிற்றூரில் பிறந்தவர்தான் தீரன் சின்னமலை. இவரது இயற்பெயர் தீர்த்தகிரி.
தனது இளம் வயதிலேயே வாள் பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம் என அனைத்து விதமான அடிமுறைகளையும் கற்று தேர்ந்த வீரர் தான் தீரன் சின்னமலை. ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவை மீட்பதற்காக மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
கொங்கு மண்டலத்தில் வரி வசூலித்து வந்த மைசூர் அரசை எதிர்த்துப் போராடியவர் தான் இந்த சின்னமலை. சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே வரி வசூலைத் தடுத்து நிறுத்தியதால் அன்றிலிருந்து சின்னமலை என்று பெயர் பெற்றார்.
ஆங்கிலேயருக்கு எதிராக மைசூரில் நடைபெற்ற மூன்று போர்களில் தீரன் சின்னமலை மற்றும் திப்பு சுல்தான் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை கண்டது. இதனால் ஆத்திரம் அடைந்து ஆங்கிலேயர்கள் புதிய போர் யுத்தியை ஒன்றை கையாள திட்டம் போட்டனர்.
வழக்கம் போல் தான், எதிர்த்து போரிடத் தெரியாதவர்கள் எந்த ஆயுதத்தைக் கையில் எடுப்பார்களோ, அதே ஆயுதத்தை ஆங்கிலேயர்களும் கையில் எடுத்தனர். திருட்டுத்தனமாகச் சூழ்ச்சி செய்து சின்ன மலையையும், அவரது சகோதரர்களையும் கைது செய்து சங்ககிரி கோட்டையில் தூக்கிலிட்டனர்.
ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்காக திப்பு சுல்தான் படை உதவி கேட்டு மாவீரன் நெப்போலியனை நோக்கி தூதுக் குழு ஒன்றை அனுப்பினார் அதில் தீரன் சின்னமலையும் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களிடம் பெற்ற வரிப்பணத்தை மைசூர் மன்னர் ஹைதர் அலியின் வீரர்கள் வாங்கிச் சென்ற போது, அந்த வரிப் பணத்தை அவர்களிடம் இருந்து பறித்து மக்களுக்கே மீண்டும் விநியோகம் செய்தவர் தீரன் சின்னமலை.
மைசூர் மன்னராக திப்பு சுல்தான் ஆட்சிக்கு வந்த பிறகு ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர் போரிட்டுள்ளார். இதனைக் கேள்விப்பட்ட தீரன் சின்னமலை, ஆயிரக்கணக்கான வீரர்களைத் திரட்டி திப்பு சுல்தானுக்கு உதவி செய்வதற்காக மைசூர் சென்றுள்ளார். அவர்களுடன் இணைந்து ஆங்கிலேயர்களைக் கலங்கடித்துள்ளார்.
இப்படிப்பட்ட ஆகச் சிறந்த வீரனின் 268 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலைக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். தற்போது சுதந்திரக் காற்று சுவாசித்துக் கொண்டிருக்கும் நாமும் தியாகச் செம்மலாக வாழ்ந்த ஆகச்சிறந்த வீரனான தீரன் சின்னமலைக்கு நமது மரியாதையான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
அந்தவகையில், 268வது பிறந்தநாளை யொட்டி சேலம் மாவட்டம் சங்ககிரியில் அமைந்துள்ள தியாகி தீரன் சின்னமலை நினைவுத்தூண் அமைவிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
Readmore: ராம நவமி!… விஷ்ணுவின் அருள் கிடைக்க!… பார்வதி தேவியிடம் சிவபெருமான் என்ன சொன்னார் தெரியுமா?