சென்னை வாசிகளே.. நின்றது கனமழை...! சென்னைக்கு மின்சாரம் வழங்கும் பணி தொடங்கியது...!
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் சென்னையை விட்டு விலகி சென்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் மிதக்கிறது. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் துணை மின்நிலையத்தில் ஆய்வு செய்த பின் பேட்டியளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, கனமழை நின்றவுடன் மின் விநியோகம் தொடங்கும் என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 1812 மின் டிரான்ஸ்ஃபார்மர்கள் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கனமழையால் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 500 டிரான்ஸ்ஃபார்மர்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது சென்னையின் சில இடங்களில் வெள்ள நீர் படிப்படியாக வடியத் தொடங்கியதால் மின் விநியோகம் வழங்கப்படுகிறது என தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.