ஜம்மு காஷ்மீரில் பரவும் மர்ம நோய்.. இரண்டு வாரங்களில் 9 பேர் உயிரிழப்பு..!! பீதியில் மக்கள்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் மர்ம நோயால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மர்ம நோய் என்ன? இது எப்படி பரவுகிறது என இதுவரை கண்டறியப்படவில்லை. நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் இறந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ரஜோரியின் பாதல் கிராமத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் இறந்தனர், மூன்று பேர் டிசம்பர் 12 ஆம் தேதி இறந்தனர், இப்போது இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜிஎம்சி ஜம்முவில் ஒரு குழந்தை இறந்தது. தற்போது, உள்ளூர் மருத்துவர்களைத் தவிர, புனேவைச் சேர்ந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, பிஜிஐ சண்டிகர் மற்றும் டெல்லியை தளமாகக் கொண்ட தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) ஆகியவற்றின் நிபுணர்களும் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் பிஎஸ்எல் ஆய்வகத்தில் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இதுவரை, 150 க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன, ஆனால் நிபுணர் மருத்துவர்களால் மக்கள் என்ன நோயாள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. இரு குடும்பங்களிலும் ஏற்பட்ட மரணத்திற்கான காரணம் ஒன்றா அல்லது வெவ்வேறு காரணங்களால் மரணங்கள் நிகழ்ந்ததா என்பது குறித்து நிபுணர்கள் இன்னும் ஆய்வு செய்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிப்பது மருத்துவர்களுக்கு சவாலாக இருப்பது இதுவே முதல் முறை. கடந்த 15 நாட்களில் மருத்துவர்கள் குழு ஏற்கனவே பல பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.