அந்த ’சார்’ யாரென்று ஊருக்கே தெரியும்..!! காவல்துறைக்கு மட்டும் தெரியவில்லையா..? பரபரப்பை கிளப்பிய நிர்மலா பெரியசாமி..!!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், நிர்மலா பெரியசாமி இந்த சம்பவம் குறித்து பரபரப்பாக பேசியிருக்கிறார். அதிமுக சார்பில் கடந்த வாரம் போராட்டம் நடைபெற்ற நிலையில், அதில் நிர்மலா பெரியசாமி கலந்து கொண்டு ஆவேசமாகப் பேசியிருந்தார். அண்ணா பல்கலைக் கழகத்தை அதிமுக நிர்வாகிகள் முற்றுகையிட முயன்றபோது காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை ரகசியம் காக்க வேண்டிய காவல்துறையே, அதை லீக் செய்துள்ளனர். இந்தளவுக்குத்தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறது என்று விமர்சித்தார். இந்நிலையில், நிர்மலா பெரியசாமி பல ஊடங்களைச் சந்தித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்டு வருகிறார். அந்த வகையில், அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "இந்த திமுக ஆட்சியில் பல பாலியல் சம்பவங்கள் நடந்து வருகிறது.
பல சம்பவங்களை என்னால் சொல்ல முடியும். ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் 200 பெண்களை வீடியோ பதிவு செய்திருக்கிறார்கள். மாயவரத்தில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகம் சம்பவம் முதல் சம்பவம் கிடையாது. இப்போது பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் 23ஆம் தேதி நடந்துள்ளது. அதற்கு முன் 21ஆம் தேதி அவரது தோழி பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் சரித்திர பதிவேடு குற்றவாளி. அவர் மீது 20 வழக்குகள் உள்ளது. எனவே, இது முதல்முறை அல்ல என்பது உறுதியாகியுள்ளது. இந்த ஞானசேகரன் பின்னர் இருப்பவர் யார்? அவர், 'எங்க சார் கூடவும் இருக்க வேண்டும்' எனச் சொன்னதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த சார் யார்? அவரை ஊருக்கே தெரிந்திருக்கிறது. காவல்துறைக்கு மட்டும் தெரியவில்லையா? அந்தப் பகுதியில் உள்ள அமைச்சர் இந்தச் சம்பவம் பற்றி இதுவரை வாய் திறக்கவே இல்லை, அமைதியாக இருக்கிறார்” என்று பரபரப்பாக பேசியுள்ளார்.