காசாவில் போர் முடிவடையவில்லை!. பிணைக் கைதிகள் திரும்பும் வரை தொடரும்!. நெதன்யாகு எச்சரிக்கை!
Netanyahu warning: காசாவில் போர் முடிவடையவில்லை என்றும், பிணைக் கைதிகள் திருப்பி அனுப்பப்படும் வரை இஸ்ரேல் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை தெரிவித்தார்.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியுள்ளது. அந்த அமைப்பு இஸ்ரேல் மீது குண்டுவீசித் தாக்குதல், ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் என இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறித்து வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி (31.07.2024) ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இவர் ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த நிலையில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்தது. டெஹ்ரானில் உள்ள இஸ்மாயில் ஹனியா வீட்டைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இதனையடுத்து ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு ஹமாஸ் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீண்டும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் மரணம் மத்திய கிழக்கில் அமைதிக்கான வாய்ப்பை அளித்துள்ளதாகவும், ஆனால் காசாவில் போர் முடிவடையவில்லை என்றும், பிணைக் கைதிகள் திருப்பி அனுப்பப்படும் வரை இஸ்ரேல் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை தெரிவித்தார்.
தற்போது தீமைக்கு அடி கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் எங்கள் பணி இன்னும் முடிக்கப்படவில்லை" என்று பதிவு செய்யப்பட்ட வீடியோ அறிக்கையில் நெதன்யாகு கூறினார். "அன்புள்ள பணயக்கைதி குடும்பங்களுக்கு, நான் சொல்கிறேன்: போரில் இது ஒரு முக்கியமான தருணம். உங்கள் அன்புக்குரியவர்கள், எங்கள் அன்புக்குரியவர்கள் அனைவரும் வீட்டிற்கு வரும் வரை நாங்கள் முழு பலத்துடன் தொடர்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.