விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை ஓய்கிறது!! - வெற்றி யாருக்கு?
ஜூலை பத்தாம் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கும் நிலையில், ஜூலை எட்டாம் தேதியான நாளை விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து இத்தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பியது. இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்திருக்கிறது அதிமுக. பணபலம், ஆளுங்கட்சி அராஜகம் உள்ளிட்டவற்றால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி.
இதையடுத்து கடந்த மாதம் 14-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 24-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட64 வேட்புமனுக்களில் 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த ஜூன் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சியினரிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவடைய இருக்கும் நிலையில் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ,வெளியூரில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மற்றும் வாக்காளர் அல்லாதோர் ஆறு மணிக்கு மேல் தொகுதிகளில் இருக்கக் கூடாது.
அவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.. மேலும் 6 மணிக்கு மேல் சமூக ஊடகங்கள், துண்டு பிரச்சாரம் என எந்த வகையான ஊடகங்கள் மூலமாகவும் வாக்கு சேகரிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இறுதி நேரத்தில் பண பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதி மீறல்கள் குறித்து கண்காணிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்திருக்கிறது. மேலும், துணை ராணுவம், காவல்துறையினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.