Election: இன்று மாலை 5மணிவரை தான் டைம்!… அனைத்து மாநிலங்களுக்கும் கெடு!... தேர்தல் ஆணையம் அவசர உத்தரவு!
Election: தேர்தல் நடத்தை விதிகளை மீறி பொது இடங்களில் சுவரொட்டிகள், ஓவியங்களை உடனடியாக அகற்ற அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இந்த நிலையில், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில், "நாட்டின் பல்வேறு பகுதிகளில் அனுமதி இல்லாத சுவரொட்டிகள், ஓவியங்கள் அகற்றப்படாமல் உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. ஆணையத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் இருப்பதை தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. எனவே அனுமதி இல்லாத அரசியல் விளம்பரங்களை உடனடியாக அகற்ற மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பான அறிக்கையை இன்று (மார்ச் 21) மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளின் படி அரசு கட்டடங்கள் மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகள் அனைத்தும் 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும். பொதுத்துறை கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகள் 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும். தனியார் கட்டடங்கள் மற்றும் சுவர்களில் உள்ள சுவரொட்டிகள் மற்றும் ஓவியங்கள் 72 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.