தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிக்காலம் இன்றுடன் நிறைவு...! விரைவில் தேர்தல்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது.
தமிழகத்தில் 500 நபர்களும் அதற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய ஊர்களை ஊராட்சிகளாக பிரிக்கப்படுகிறது. இந்த கிராம ஊராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் ஊராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஊராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
ஊராட்சி மன்றத்திற்கான தலைவர் மக்களால் நேரடியாகத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இந்த ஊராட்சி மன்றத்திற்கான துணைத் தலைவர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார். ஊராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி மன்றத் தலைவரே அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.
தமிழகத்தில் மொத்தம் 12,524 ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இதன்படி, ஊராட்சித் தலைவர்கள், ஊரக ஒன்றிய தலைவர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள் தங்களது அலுவலகத்தில் உள்ள பணியாளர்களுக்கு விருந்து கொடுத்து விடை பெறுகின்றனர். இனி ஊராட்சி மன்ற செயலாளர்கள் தான், அரசு நலத்திட்டங்கள், மக்களுக்கான திட்டங்களை கண்காணிப்பார்கள். இதனால், தமிழகத்தில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.