வேகமெடுக்கும் சண்டிபுரா வைரஸ்..!! தமிழகத்தில் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!!
சந்திபுரா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கும் மாவட்டச் சுகாதார அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பீதி ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது வட மாநிலங்களில் ‘சண்டிபுரா வைரஸ்’ தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 9 மாதங்கள் முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை மட்டும் குறிவைத்து தாக்கும் சண்டிபுரா வைரஸால் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் 8-10 மணி நேரத்தில் உயிரிழந்துவிடுவார்கள் என்பதால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் மருத்துவமனை நோக்கி படையெடுத்திருக்கின்றனர்.இந்த வைரஸ் கொசு, மணல் ஈ மற்றும் உண்ணி உள்ளிட்டவற்றால் பரவுகிறது. சாதாரண காய்ச்சல் போல இருப்பதால் மக்களால் இதை அடையாளம் காண முடிவதில்லை. இந்நிலையில், குஜராத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது எந்த வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது?
சந்திபுரா வெசிகுலோவைரஸ் என்பது ராப்டோவிரிடே என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. ராப்டோவிரிடே என்பது நாய்களில் ரேபீஸ், குதிரைகளில் வெசிகுலர் ஸ்டோமடிடிஸ் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பமாகும். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சந்திபுரா வைரஸ், சந்திபுரா என்செஃபலிடிஸ் என்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த வைரஸ் எந்த உறுப்பை பாதிக்கும்?
என்செஃபலிடிஸ் என்பது மூளையில் ஏற்படும் வீக்கத்தைக் குறிக்கும். இந்த வீக்கம் ஏதேனும் தொற்று காரணமாகவோ, அல்லது எதிர்ப்பு சக்தியின் எதிர்வினை காரணமாகவோ ஏற்படலாம். இந்தியாவில் குழந்தைகளிடம் பரவலாக ஏற்படும் ஜேபனீஸ் என்செஃபலிடிஸ் நோயும் இதே போன்று மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். மூளையில் ஏற்படும் வீக்கத்தால் பக்கவாதம், கோமா, சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படலாம்.
அதிகமான காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வலிப்பு, உணர்தல் செயல்பாடு இழப்பு, விரைவாக கோமாவுக்கு இட்டுச் செல்வது இந்த நோயின் அறிகுறிகள். இந்த வைரஸ் நோயால் குழந்தைகளே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளை தாக்க காரணம்
சந்திபுரா வைரஸ் காரணமாக குழந்தைகளே அதிகமாக பலியாகியுள்ளனர். சிறு பிள்ளைகள் அதிகமாக வெளியில் விளையாடுவதால் அவர்கள் மணல் ஈக்களால் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வயதானவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களும் இந்த வைரஸ் நோயால் தீவிர பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நோய்க்கு மருந்து உண்டா?
டெங்கு, கொரோனா போன்ற பல வைரஸ் நோய்களைப் போல இந்த நோய்க்கும், வைரஸை நேரடியாகத் தாக்கும் மருந்து கிடையாது. எனவே வைரஸால் உடம்பில் ஏற்படும் அறிகுறிகளைத் தணிக்கவே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நோய் முதல் முறை ஏற்படுகிறதா?
1960-களில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சந்திபுரா பகுதியில் இந்த வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டதாக மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன. சந்திபுரா வைரஸ் தொற்று 2003 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பரவியது. அப்போது குஜராத், மகாராஷ்ட்ரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டது.
நோய் பரவலைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
- முழு கை கால் சட்டை அணிந்து கொள்ள வேண்டும்
- கொசு விரட்டிகள், கொசு வலைகள் பயன்படுத்தலாம்
- வெறும் காலில் நடப்பதை தவிர்க்க வேண்டும்
- மனித வசிப்பிடங்களிலிருந்து 150 அடிக்குள்ளாக இருக்கும் தேவையற்ற செடிகளை அகற்ற வேண்டும்
- சுவர்களில் இருக்கும் விரிசல்கள், ஓட்டைகளை அடைக்க வேண்டும்
எந்தப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தலாம்?
ஒரு சதுர மீட்டருக்கு 0.25 கிராம் என்ற அளவில், லிண்டேன் எனும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவது நல்ல பலன்களைத் தரும். இதனை மனித வசிப்பிடங்களிலும், கால்நடைகளின் வசிப்பிடங்களிலும் தெளிக்க வேண்டும். இந்த வைரஸ் மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் சோதித்துப் பார்க்க முடியும். தமிழ்நாட்டில் சந்தேகப்படும் வகையில் யாருக்கேனும் அறிகுறிகள் இருந்தால் அவர்களின் ரத்த மாதிரிகள் சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
Read more ; உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்த Cloudflare Outrage என்றால் என்ன தெரியுமா?.