டாஸ்மாக் கடைகளுக்கு நவம்பர் 2-ம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும்..!
தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு நவம்பர் இரண்டாம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக அரசு மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று கூறிக்கொண்டு மது விற்பனையை அதிகரிக்க இலக்கை நிர்ணயித்து இரட்டை வேடம் போடுவது கண்டிக்கதக்கது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் நிறுவனம் விற்பனை இலக்கை நிர்ணயித்து இருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வருத்ததிற்குரியது. ஒருபுறம் மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வருவோம் என்றும், மறுபுறம் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் செய்தும் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவது மிகவும் கண்டிக்கதக்கது.
தமிழக அரசு பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க இலக்கை நிர்ணயிக்கிறது. ஆட்சியும், அதிகாரமும் இவர் கையில்தான் உள்ளது. உண்மையில் நாட்டு மக்களில் நலனில் அக்கரை இருந்தால் ஒரே கையெழுத்தில் மதுவிலக்கை கொண்டுவர முடியும். ஆனால் ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லை. மதுவினால் வரும் வருமானமே முக்கியம். தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் மதுவிலக்கு பிரிவும் உள்ளது, டாஸ்மாக் நிறுவனமும் உள்ளது.
இதுதான் திராவிட மாடல். மக்கள் மீது பல்வேறு வரிச்சுமையையும், விலைவாசி உயர்வையும் ஏற்றிவிட்டு, மதுவின் விற்பனையால், ஏழை, எளிய, மக்களின் வருமானத்தையும், சேமிப்பையும் உறிஞ்சும் வேலையில் தான் தி.மு.க அரசு செயல்படுகிறது. இன்னிலை மாற வேண்டும். தமிழக அரசு அனைத்து பண்டிகை காலங்களிலிலும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும். தற்பொழுது தீபாவளி வருவதால் அனைவரும் சந்தோசமாக பண்டிகையை கொண்டாட ஆக்டோபர் 30-ஆம் தேதியில் இருந்து நவம்பர் 2-ஆம் தேதி வரை டாஸ்மாக்கிற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.