கார்களில் கட்சி கொடி கட்டுவதற்கு எதிராக நடவடிக்கை...! தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில்...
கார்களில் கட்சி கொடி கட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தனியார் வாகனங்களில் காவல் துறை, ஊடகம், வழக்கறிஞர், டாக்டர்' என ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது.. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் இருந்து, மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி, தமிழ்நாடு மருத்துவர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலர் சீனிவாசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு, நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கார்களில் கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருப்பதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் பிரதாப், கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கார்களில் கட்சி கொடி வைத்திருப்பதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூலை 2-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.