கள்ளக்குறிச்சி விவகாரம் | உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு அரசு!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் ஒருநபர் ஆணையம் அமைத்திட என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதாக 109 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் இன்று காலை வரை 34 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதோடு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்.